மேற்குவங்கத் தேர்தல்:இடது சாரிகளுக்கு ஏற்பட்ட ஞானோதயம்

Posted: ஏப்ரல் 19, 2011 in NEWS

மேற்குவங்காளத்தின் சமீபகால வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த சட்டமன்றத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நேற்று முடிவடைந்தது. ஆறு கட்டங்களாக நடைபெறும் தேர்தல் மேற்கு வங்கத்தின் எதிர்காலத்தை மட்டுமல்ல இந்தியாவில் இடதுசாரிகளின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கக்கூடியதாகும்.

34 ஆண்டுகளாக ஆட்சியில் தொடரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான இடதுசாரி கூட்டணி மே.வங்க அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய சவாலை இத்தேர்தலில் சந்திக்கிறது. திரிணாமுல்-காங்கிரஸ் கூட்டணி இத்தேர்தலில் இடதுசாரிகளை முறியடித்தால் தேசிய அளவில் இடதுசாரி கட்சிகளின் புகழும், முக்கியத்துவமும் கேள்விக்குறியாகும்.

மே.வங்கத்தைப்போல் கேரளாவிலும் இடதுசாரிகளுக்கு தோல்வி ஏற்பட்டால் கடந்த பல வருடங்களாக தேசிய அரசியலில் நிர்ணாயக சக்தியாக விளங்கிய சி.பி.எம்மின் தேசிய கட்சி என்ற அந்தஸ்து பறிபோகும். ஆதலால், என்ன விலைக்கொடுத்தேனும் வெற்றியை கைப்பற்றுவது என சி.பி.எம் களமிறங்கியுள்ளது.

ஆனால், மே.வங்கத்தில் இடதுசாரிகளுக்கு வெற்றி எளிதானதல்ல என்பதை முன்பு நடந்த மக்களவை தேர்தலும், உள்ளாட்சித் தேர்தல்களும் சுட்டிக்காட்டும் உண்மையாகும். இடதுசாரிகளுக்கு இதுவரை ஆதரவளித்த பல பிரிவினரும் இம்முறை அவர்களை கைவிட்ட காட்சியைத்தான் மே.வங்கத்தில் காணமுடிகிறது. இவ்வளவு காலம் ஆதரவளித்த கிராம பகுதிகளைச் சார்ந்த ஏழ்மையான மக்கள் இடதுசாரிகளுக்கெதிரான நிலைப்பாட்டை இத்தேர்தலில் கையாளுகின்றனர்.

இதற்கான காரணங்களைக் குறித்த விரிவான ஆய்வுகளும், தவறுகளை திருத்தலும் நடக்காமலிருக்கவில்லை. மேற்குவங்கத்தில் பெருவாரியாக வாழும் முஸ்லிம்கள் இவ்வளவு காலம் இடதுசாரிகளின் வாக்குவங்கியாக திகழ்ந்தனர். ஆனால் இடதுசாரி கூட்டணி அவர்களை சமூகரீதியாகவோ, பொருளாதாரரீதியாகவோ, அரசியல்ரீதியாகவோ முன்னேற்றுவதற்கு ஒரு சிறு துரும்பைக்கூட அசைத்ததில்லை. ஆனால், அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் இத்தனை காலமும் ஆதரவளித்த சிறுபான்மை சமூகத்தின் வாழ்வாதாரங்களான விவசாய நிலங்களையும், வசிப்பிடங்களையும் தட்டிப்பறிக்க முயன்றபொழுது தங்களது அனைத்து சக்திகளையும் பிரயோகித்து எதிர்ப்பு போராட்டத்தை நடத்தினர். எதிர்த்து நின்ற மக்களை துப்பாக்கிக் குண்டுகளுக்கு பலியாக்கிவிட்டு தங்களது வளர்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்த முயன்றது இடதுசாரி அரசு.

இத்தகையதொரு மக்கள் விரோத கொள்கைகளும், அணுகுமுறைகளும் இடதுசாரிகளை சாதாரண மக்களிடமிருந்து விலக்கியது. தற்போது அவையெல்லாம் தவறானது என அவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். சிங்கூரிலும், நந்திக்கிராமிலும் நிலங்களை கைப்பற்றிய நடவடிக்கைகள்தாம் தனது அரசுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய தவறு என புத்ததேவ் பட்டாச்சார்யா கூறுகிறார். அத்தகையதொரு ஞானோதயம் உள்ளார்ந்த நேர்மையுடன் இருந்தால் நல்லதுதான். ஆனால், தங்களை கைவிட்ட மக்களை மீண்டும் ஆதரவு தெரிவிக்க அழைப்பதற்கு வெறும் வார்த்தைகள் மட்டும் போதுமானதல்ல என்பதை இடதுசாரிகள் உணர்ந்துக்கொள்ள வேண்டும்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s