அடுத்தமுறை போராட்டத்துக்கு வருபவர்கள் ஆயுதங்களுடன் வரவேண்டும் என்று பிரபல யோகா சாமியார் பாபா ராம்தேவ் கூறியுள்ளார்.
ஊழல் மற்றும் கறுப்புப் பணத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மத்திய அரசை வலியுறுத்தி வந்த பாபா ராம்தேவ், மத்திய அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து டெல்லி ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
நள்ளிரவில் ராம்லீலா மைதானத்துக்குள் புகுந்த காவல்துறையினர் ராம்தேவ் மற்றும் அவரது ஆதரவாளர்களை மைதானத்தைவிட்டு அப்புறப்படுத்தியது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளைத் தொடக்கத்தில் கடுமையாக விமர்சனம் செய்த பாபா ராம்தேவ், செவ்வாய்க் கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசியபோது, மத்திய அரசை மன்னித்துவிட்டதாகத் தெரிவித்தார்.
ஆனால் புதன் கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசிய ராம்தேவ், அடுத்த முறை போராட்டத்தில் பங்கேற்பவர்கள் ஆயுதங்களுடன் எதிர்தாக்குதலுக்குத் தயாராக இருப்பார்கள் என்று கூறினார்.
மேலும், ராம்லீலா, ராவண்லீலாவாக மாறும். அப்போது யாருக்கு அடி விழுகிறது என்பதைப் பார்ப்போம். இதற்காக ஒவ்வொரு பிராந்தியத்திலிருந்தும் 20 இளைஞர்கள் முன்வர வேண்டும். அவர்கள் 30 லிருந்து 40 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். பெண்களும் முன்வரலாம்.
அவர்கள் தங்கள் உயிரையும் அர்ப்பணிக்க தயாராக இருக்க வேண்டும். அவர்களுக்கு ஆயுத பயிற்சி அளிக்கப்படும். 10 ஆயிரம் ஆண்கள் மற்றும் பெண்கள் அடங்கிய படையை உருவாக்க திட்டமிட்டுள்ளோம் என்றும் ராம்தேவ் கூறியுள்ளார்.