தமிழ் முஸ்லிம் வரலாறு – II

Posted: செப்ரெம்பர் 9, 2011 in INDIAN MUSLIM

அரபு வணிகர்களது குடியிருப்புகள்

இத்தகைய இஸ்லாமியரின் அரபு வணிகர்களது குடியிருப்புகள் சோழ நாட்டிலும், பாண்டிய நாட்டிலும் பல பகுதிகளில் எழுந்தன. அவை, அஞ்சுவண்ணம் என மக்களால் அழைக்கப்பட்டன. இந்த அஞ்சுவண்ணம் ஒன்று நாகப்பட்டினத்துக்கு அருகில் அமைந்திருந்ததை தனிப் பாடல் ஒன்றின் மூலம் தெரிந்துக்கொள்ள முடிகிறது. பாண்டிய நாட்டின் தென்பகுதியான நாஞ்சில் நாட்டில் திருவிதாங்கோடு அருகில் அஞ்சுவண்ணம் என்ற பெயரிலேயே ஒரு சிற்றூர் இன்றும் நிலைத்திருக்கிறது. இந்தக் குடியிருப்புகளில் வாழ்ந்து வந்த அராபிய இஸ்லாமியர், நாளடைவில் வணிகத்துடன் மட்டுமல்லாமல் சமுதாய நிலைகளிலும் தங்களைத் தொடர்பு படுத்திக்கொண்டு கலந்து தமிழ் முஸ்லிம்கள் என்ற புதிய பெயரினைப் பெற்றனர்.

வாணிபத்திற்கு அவர்கள் பயன்படுத்திய வாய்மொழியான தமிழ், இப்போது அவர்தம் வழித்தோன்றல்களின் தாய் மொழியாக மாறியது. அதுவரை சோழ – பாண்டிய மன்னர்களால் மெய்க்கீர்த்திகளிலும், கல்வெட்டுகளிலும், சோனகர் – துலுக்கர் எனக் குறிப்பிடப்பட்ட இந்த மேலைநாட்டு முஸ்லிம்கள், தமிழ் முஸ்லிம்கள் என்ற தகுதியையும், அரசியல் முதன்மையையும் எய்தினர். இந்தப் புதிய தமிழ்ச் சமுதாயத்தினரது அணிகலன்களும், ஆடைகளும், உணவு முறைகளும் தமிழ் மக்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. நாளடைவில் இந்தக் குடியிருப்புகளிலும், வணக்கத் தலங்களிலும் அமைக்கப்பட்ட கட்டுமானங்கள், குறிப்பாக மேற்கூரைகள், கும்ப அமைப்பில் அமைக்கப்பட்ட அலங்கார கோபுரங்கள், சாளரங்கள், முகப்பில் பயன்படுத்தப்பட்ட வில் வடிவ குதிரைக் குளம்பு அமைப்பு வளைவுகள் ஆகியவை திராவிட – இஸ்லாமிய கட்டுமானங்கள் என்ற புதிய பாணியை ஏற்படுத்தின.

இஸ்லாமிய ஞானிகளின் செயல்பாடுகள்

தமிழகத்தில் ஏற்கனவே தழைத்து வளர்ந்து வந்த சைவம், வைணவம், சமணம், பௌத்தம் ஆகிய சமயங்கள் போன்று இஸ்லாமும் தமிழகத்தில் சமயங்களில் ஒன்றாக நிலைபெற்றது. தமிழ் சமுதாயத்தில் தவிர்க்க முடியாத அங்கமாக தமிழ் முஸ்லிம்கள் அங்கீகரிக்கப்பட்டனர். இத்தகைய சமய நிலையும், நோக்கும் ஏற்படுவதற்கு, அன்று அரபகத்திலிருந்து தமிழகம் வந்த இஸ்லாமிய ஞானிகளே பெரிதும் உதவினர். இவர்கள் தங்களது அரிய வாழ்வினைத் தமிழ் மக்களின் சமூக ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்கும் அர்ப்பணித்து வந்தனர்.

தமிழ் மக்களால் பெரிதும் போற்றப்பட்டு வந்த தமிழ்நாட்டுபதினெண் சித்தர்களைப் போன்று இந்த இஸ்லாமிய ஞானிகளின் ஆன்மீக உபதேசங்களும் தமிழ் மக்களால் மனமுவந்து ஏற்கப்பட்டன. இந்தப் பதினெண் சித்தர்களில் ஒருவரான சதுரகிரி மலையைச் சேர்ந்த இராமதேவர் இஸ்லாத்தை ஏற்று, புனித மக்கா சென்று திரும்பினார். தமது பெயரையும் யஃகூபு சித்தர் என மாற்றி அமைத்துக் கொண்டார். கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் சிரியா நாட்டிலிருந்து தமிழகம் வந்த இறைநேசர் நத்ஹர், காலமெல்லாம் திருச்சிப் பகுதி மக்களது ஆன்மீக வழிகாட்டியாக வாழ்ந்து, திருச்சியிலேயே இயற்கை எய்தினார். இவர்களை அடுத்து தென்பாண்டிய நாட்டிற்கு வந்த இறைநேசர் செய்யிது இபுறாஹீம், மொரோக்கோவில் தோன்றி பின் இஸ்லாத்தை பரப்புவதற்காக (கி.பி. 1142 – 1207) இந்தியா வந்தார். பாண்டிய மன்னர் குலசேகரன் சார்பாக மற்றுமொரு பாண்டிய மன்னர் விக்கிரமனுடன் போரில் ஈடுபட்டார். இப்போரின் விளைவாக அரசாட்சி சையித் இப்ராஹிம் அவர்கள் கையில் வந்தது. தமிழ் நாட்டின் ஒரு பகுதியை அரசாண்ட முதல் முஸ்லிம் மன்னர் (கி.பி. 1195-1207) இவர்களே.

கி.பி. 1207-ல் வீரபாண்டியனுடன் நடந்த மற்றுமொரு போரில் காலமானார்கள். இராமனாதபுரம் ஏர்வாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள். மதினா நகரின் ஒரு பகுதியான யர்புத என்ற இடத்திலிருந்து அவர்கள் புறப்பட்டு வந்ததால் அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கும் யர்புத் என்றே பெயர் சூட்டப்பட்டது. இச்சொல் நாளடைவில் ஏர்வாடி என்று மருவி விட்டது. முகம்மது நபி அவர்களின் வம்சாவழியைச் சார்ந்த சுல்தான் ஜமாலுத்தீன் அவர்கள் தலைமையில் ஒரு குழுவினர் பாண்டிய மன்னன் சுந்தர பாண்டிய தேவன் ஆட்சி காலமான கி.பி.1284 (ஹிஜ்ரி737)ல் காயலில் வந்து குடியேறினார். இச் சமயத்தில் எகிப்தை முகம்மதிப்னு கலாவூன் ஆட்சி செய்திருந்தார். இவர்கள் ஜும்ஆ பெரிய பள்ளியை பிரமாண்டமாக விரிவுபடுத்தி கட்டினர். சுல்தான் ஜமாலுத்தீன் அவர்கள் பரம்பரையினர் பிரபுக்கள் என்று அழைக்கப்படுகின்றனர்

சுந்தர பாண்டிய தேவன் கி.பி. 1293ல் காலமான பின் செல்வாக்குடன் திகழ்ந்த சுல்தான் செய்யிது ஜமாலுத்தீன் பாண்டிய நாட்டின் மன்னரானார். இச் சமயத்தில் காயல்பட்டிணம் அதன் தலைநகரமாக விளங்கியது. இவர் கி.பி.1306 (ஹிஜ்ரி706)ல் காலமானார். கலிபா உமர் அவர்கள் காலத்தில் கி.பி. 642-ல் மாலிக் இப்னு தீனார் தலைமையில் இஸ்லாத்தை பரப்ப ஒரு குழு கடல் மார்க்கமாக கேரளா வந்து சேர்ந்தது. அதில் ஒரு பகுதியினர் காயல்பட்டிணம் வந்து குடியேறி கடற்கரையோரமாக ஒரு பள்ளியைக் கட்டினர். தற்போது இப்பள்ளி கோசுமறை அருகே புதையுண்டுள்ளது. இதன் இமாம் செய்யிது அஹமது ஷஹிது இப்னு முஹம்மது கரீம் மதனி ஆவார்கள். இக் குழுவினர் அப்பகுதியில் குடியேறி வாழ்ந்து வந்தனர். பின்னர் கடலேறி இப்பகுதி புதையுண்டுவிட்டது.

கி.பி. 842ல் எகிப்து தலைநகர் கெய்ரோவில் கலீபா அல்வாதிக் ஆட்சி காலத்தில் கலிபா அபூபக்கர் அவர்களின் வம்சாவழியைச் சார்ந்த முஹம்மது கல்ஜி அவர்கள் தலைமையில் ஒரு குழுவினர் எகிப்தில் மன்னரின் புதிய கொள்கையை ஏற்க மறுத்து கடல் மார்க்கமாக ஜயவீர ராஜகாரு வேந்தர் காலத்தில் காயல்பட்டிணம் வந்து சேர்ந்தனர். இவர்கள் இந்நகரில் கி.பி.843ல் ஜும்ஆ பெரிய பள்ளியை கட்டினர். கி.பி. ஏழாவது நூற்றாண்டிற்குப் பிறகு தென்னிந்திய மக்கள் வெளிநாட்டுத் தொடர்புகள் மூலமாக என்னென்ன நன்மைகளையும் லாபங்களையும் பெற்றார்களோ அவை அனைத்தும் அப்பகுதியில் வாழ்ந்த முஸ்லிம்கள் மூலமாகவே வந்தடைந்தன என்று கொள்ளலாம் என டாக்டர் தாராசந்த் பெருமிதத்துடன் குறிப்பிடுகிறார்.

ஆட்சி பொறுப்பில் இருந்த முஸ்லிம் மன்னர்கள் இஸ்லாமியப் பிரச்சாரத்திற்காக எதுவும் செய்ததாக எந்தவிதமான தடயங்களையும் யாரும் கண்டுபிடித்துச் சொல்லவில்லை. இந்த சுல்தான்கள் ஆட்சிக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மதுரையிலும் தமிழ் நாட்டின்இதர பகுதிகளிலும் முஸ்லிம் பொது மக்கள் வாழ்ந்து தான் வந்தார்கள்.

பாண்டிய மன்னனின் படையில் முஸ்லிம்கள்

மாலிக்காபூர் மதுரை மீது படையெடுத்து வந்த போது பாண்டிய மன்னனின் படையில் இருபதினாயிரம் முஸ்லிம்கள் சேவையாற்றி வந்தனர் என இப்னு பதூதா என்ற யாத்ரிகரின் குறிப்பிலிருந்து அறிந்து கொள்ள முடிகிறது.

இஸ்லாமூம்தமிழர்களும்

தமிழர்களின் அடிப்படைக் கொள்கை “”ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதாகும். இந்த தாரக மந்திரம் சில காலம் தமிழகத்தில் மறக்கடிக்கப்பட்டாலும், கடந்த நூற்றாண்டில் சுயமரியாதை இயக்கங்களின் எழுச்சி மீண்டும் இந்தக் கோட்பாட்டை தமிழர்களிடையே மலரச் செய்தது

இந்தியாவின் மாபெரும் ஆன்மிக அறிஞர்களில் ஒருவரான சுவாமி விவேகானந்தர் பின்வருமாறு குறிப்பிடுகிறார். “”முஹம்மதியர்களின் வருகை ஒடுக்கப்பட்டோர் முதல் ஏழைகள் வரை ஈடேற்றம் தருவதாக அமைந்தது. இதனால்தான் நமது மக்களில் ஐந்தில் ஒரு பங்கினர் முஸ்லிமாக ஆகியுள்ளார்கள். வாளால் இந்த வேலை நடைபெறவில்லை. வாளும், நெருப்பும் இந்த வேலையைச் செய்தது என்று சொல்வது பேதமையின் உச்சமாகத் தான் இருக்கும். உயர்சாதி மனிதர் நடமாடும் அதே வீதியில் செல்வதற்குத் தாழ்த்தப்பட்டவருக்கு அனுமதி கொடுக்கப்படாததை நான் பார்த்தேன். ஆனால் அவன் தனது பெயரை முஹம்மதியப் பெயராக மாற்றிக் கொண்டால் இந்தச் சிக்கல் இருப்பதில்லை 

தமிழர்கள் இஸ்லாத்தை தழுவுவது ஏழாம் நூற்றாண்டிலிருந்து தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது. இதுகுறித்து விரிவாக, கூட்டாக ஆய்வு செய்துள்ள அலிகர் மற்றும் உஸ்மானியா பல்கலைக்கழகத்தின் முன்னாள் இணைவேந்தரும் வரலாற்றாசிரியருமான பேராசிரியர் கே.எம். பஹாவுத்தீன் மற்றும் கொல்லம் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை பேராசிரியரான முனைவர் எம்.எஸ். ஜெயப்பிரகாஷ் ஆகியோர் தமிழகத்தில் மூன்று அல்லது நான்கு கட்டங்களாக இஸ்லாம் பரவியது என்று குறிப்பிடுகிறார்கள்.

இஸ்லாம், தமிழகத்தில் முதன் முதலாகப் பரவிய காலத்தில் (கி.பி. 650-750) சமண மதம் பெரும் நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருந்தது; தமிழகத்தில் இஸ்லாம் பரவுவதற்கு எவ்வித முட்டுக்கட்டைகளும் இருக்கவில்லை என்றும் அவர்கள் தெரிவிக்கிறார்கள். இஸ்லாம் மனிதர்களிடையே ஏற்றத் தாழ்வை கற்பிக்காததால் சமணர்களும் பௌத்தர்களும் அந்த மார்க்கம் பரவுவதை எதிர்க்கவில்லை என்றும் கேரளாவின் தலைசிறந்த வரலாற்றாசிரியர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள அவர்கள் இருவரும் குறிப்பிடுகிறார்கள்.

கழுவில் ஏற்றப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்ட சமணர்கள்தான் தமிழகத்தில் சமத்துவம் வேண்டி முதன் முதலில் இஸ்லாத்தை தழுவிய தமிழர்கள் ஆவார்கள். இந்த வரலாற்று ஆய்விலிருந்து தொடக்கக் காலத்திலிருந்தே தமிழர்கள் வாழ்வில் சமத்துவத்தை ஏற்படுத்தும் தத்துவமாக இஸ்லாம் அங்கீகரிக்கப்பட்டதை நம்மால் அறிய முடிகின்றது

தமிழகத்தில் தீண்டாமையில் இருந்து விடுதலைப் பெற அலையலையாக தாழ்த்தப்பட்ட மக்கள் இஸ்லாத்தை தழுவுவது 20-ம் நூற்றாண்டு முழுவதும் பரவலாக நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் தீண்டாமையின் கொடுமையிலிருந்து விடுதலைப் பெற மக்கள் இஸ்லாத்தைத் தழுவுவது 1981 வரை சர்வ சாதாரணமாக நிகழ்வாக இருந்தது. ஆனால் திருநெல்வேலி மாவட்டம் மீனாட்சிபுரத்தில் 1981-ல் நடைபெற்ற மதமாற்றம், தமிழர்களில் ஒரு பிரிவினர் தீண்டாமைக்குத் தீர்வாக இஸ்லாத்தைத் தேர்ந்தெடுக்கின்றனர் என்பதை அகிலமே அறியும் நிகழ்வாக மாற்றியது. சுயமரியாதை நாடி இஸ்லாத்தைத் தழுவியவர்கள் பண ஆசைப்பட்டு மதம் மாறியதாக கொச்சைப்படுத்தப்பட்டார்கள். ஆனால் மத்திய அரசின் ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கை மதமாற்றத்திற்கான உண்மையான காரணத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s