பாலஸ்தீனம் நோக்கி ஒரு பயணம்

Posted: செப்ரெம்பர் 22, 2011 in MUSLIM WORLD

“உலகின் அனைத்து துயரங்களின் மொழியும் ஒரே அலைவரிசையில்தான் இருக்கின்றன”
அ. முத்துகிருஷ்ணன்

எழுத்தாளர் அ. முத்துக்கிருஷ்ணன் தமிழ்ச்சூழலில் காத்திரமாக இயங்கி வருபவர். விளிம்புநிலை மக்கள், சிறுபான்மையினர், சுற்றுப்புறச்சுழல், உலகமயம், மனித உரிமைகள் என பல தலைப்புகளில் தொடர்ந்து எழுதியும் இயங்கியும் வருபவர். தன் எழுத்துக்களுக்காகத் தொடர்ந்து கடந்த பத்தாண்டுகளாகப் பயணித்தும் வருபவர்.

இந்தியாவின் குஜராத், ஒரிசா, விதர்பா, ஜார்கண்டு, ஆந்திரம் என இந்தியாவெங்கும் களப்பணிக்காக மாதத்தின் பாதி நாட்கள் பயணத்தில் இருப்பவர். மிக அபூர்வமான பல தகவல்களைப் பார்வைகளைத் தமிழக வாசகர்களுக்கு வழங்கி வருபவர். தொடர்ந்து உயிர்மை, தலித் முரசு என பல இதழ்களில் எழுதியும் வருபவர், தன் எழுத்தின் ஒரு பகுதியாக முக்கிய படைப்புகளை தமிழுக்கு மொழியாக்கமும் செய்துள்ளார். குஜராத் இனப்படுகொலை குறித்த தெகல்கா ஆவணங்களை இந்திய மொழிகளில் முதலாவதாக தமிழல் நமக்கு வழங்கியவர். அத்துடன் அப்சலை தூக்கிலாடாதே, தோழர்களுடன் ஒரு பயணம் இவரது முக்கிய மொழியாக்க நூல்கள். ஒளிராத இந்தியா, மலத்தில் தோய்ந்த மானுடம் இவரது இரு கட்டுரை தொகுதிகள்


கேள்வி : பாலஸ்தீனம் உங்களுக்குள் நுழைந்தது எப்படி? அதனுடன் உங்களின் ஆரம்பக்கால அனுபவம் என்ன?

பதில் : பாலஸ்தீனம், யாசர் அராபத் ஆகிய வார்த்தைகள் என் பள்ளி பருவத்திலேயே எனக்கு அறிமுகம் ஆயின. பாலஸ்தீனம் எங்கோ இந்த உலகத்தில் இருக்கும் ஒரு நாடாகவும், யாசர் அராபத் அவர்கள் இந்திரா காந்தியுடன் நிற்கும் புகைப்படங்களை நாளிதழ்களில் பார்த்து அவர் ஒரு சர்வதேச தலைவராகவும் மனதில் மங்கலான பதிவுகள்தான் முதல் அறிமுகங்கள். பாலஸ்தீனம் இஸ்ரேல் ஆகிய சொற்கள் ஏறக்குறைய வாரம்தோறும் செய்தியாக மாறிய பிறகு இந்தப் பிரச்சனையின் வீரியம் மெல்ல என் கவனத்தைக் கோரியது. இருப்பினும் நாளிதழ்களைத் தவிர்த்து என்.ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய நீதிக்காகப் போராடும் பாலஸ்தீன மக்கள் என்கிற நுலையும் தன்யா ரென்யத் எழுதிய இஸ்ரேல்-பாலஸ்தீனம் ஆகிய நூல்கள்தான் இந்தப் பிரச்சனையின் அடிப்படைகளைப் புரிந்து கொள்ளப் பெரிதும் உதவின. அதன் பின் கோவாவைச் சேர்ந்த ரஞ்சன் சாலமன் என்பவர் எனக்குப் பாலஸ்தீனம் தொடர்பாக வாரந்தோறும் அனுப்பும் செய்தி மடல்களின் தொடங்கி ஊடகங்களின் துணையுடன் இந்த வரலாற்றுப் பிரச்சனையைப் புரிந்துகொள்ள முயன்று வருகிறேன். இந்தப் பயணத்தை நான் மேற்கொண்டது கூட பாலஸ்தீனத்தை இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்கிற ஆவலால்தான்.

கேள்வி: இந்தப் பயணக்குழுவில் நீங்கள் எப்படி இணைந்தீர்கள்? உங்களின் பயணம் அமைவதற்குக் காரணமாக இருந்தது உங்களின் இடதுசாரி அரசியல் பார்வையா? யார் இந்தப் பயணத்தை ஏற்பாடு செய்தது?

பதில்: நான் இந்தக் குழுவில் இணைந்தது மிகவும் தற்செயலாக நடந்த நிகழ்வு தான். கோழிக்கோட்டையைச் சேர்ந்த பிஷ்ருத்தீன் ஷர்கி அவர்கள் என்னுடைய இணைய நண்பர். தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக நாங்கள் பல கருத்துக்களைச், செய்திகளை விவாதித்து வருகிறோம். கடந்த ஆண்டு திருவனந்தபுரம் திரைப்பட விழாவிற்குச் சென்றிருந்த போது அவர் என்னை அடையாளம் கண்டு வந்து பேசினார். இதுதான் எங்கள் முதல் நேரடி சந்திப்பு. அதன் பின் எங்கள் நட்பு இன்னும் நெருக்கமானது. ஒரு நாள் இணையத்தில் உரையாடிக் கொண்டிருந்த பொழுது அவர் குரானில் இடம்பெற்றுள்ள முக்கிய தளங்கள் (Q-Destinations) சார்ந்த ஒரு சுற்றுலாவுக்குச் செல்லவிருப்பது குறித்து விரிவாகக் கூறினார். அப்பொழுது நான் இந்தப் பயணத்தில் இடம் பெரும் நகரங்கள் அனைத்தும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை எனக் குறிப்பிட்டேன். கட்டாயம் ஒரு முறை உங்களுடன் இந்தப் பயணத்தில் நானும் உடன் வருவேன் எனத் தெரிவித்தேன் . உடனே அவர் டிசம்பர் மாதம் காசாவுக்கு ஓர் ஆசிய குழு செல்லவிருக்கிறது என்பதைத் தெரிவித்து என்னை அதற்கு விண்ணப்பிக்கும் படி கேட்டுக் கொண்டார். உடனே அதன் நடைமுறைகளை பின் தொடர்ந்து ஓடினேன். இந்திய அளவிலான முக்கிய எழுத்தாளர்கள், சிந்தனையாளர்களுடன் எனக்கு இருந்த நேரடி அறிமுகம் எனக்கு இந்த வாய்ப்பு கிடைக்க பெரிதும் உதவியது.

ஈராக், ஆப்கான் வரை நீளும் ஆக்டோபசின் கரங்கள் நம் காலத்து சோகம் என்றால், நெடுங்காலமாக இஸ்ரேலுக்கு ஆயுதங்களையும் பணத்தையும் கொடுத்து பாலஸ்தீனத்தை உலக வரைபடத்தில் இருந்தே மெல்ல மெல்ல அகற்றும் பணியை அமெரிக்கா நாசுக்காகச் செய்து வருவது நாம் அறிந்ததே. காசா பகுதியின் மீது தினமும் குண்டுமழை பெய்து கொண்டே இருப்பது ஆங்கில செய்தி ஊடகங்களுக்குக் கச்சா பொருளாக மட்டுமே இருந்தாலும் அதைப் பார்க்கும் பொழுதெல்லாம் மனதில் பெரும் துயராக ஒலித்துக் கொண்டேயிருந்தது. அந்தப் பதட்டம் மிகுந்த பகுதிக்கு நல்லிணக்க பயணக்குழு செல்கிறது என்றவுடன் இது எனக்கு கிடைத்த வாழ்நாள் சந்தர்ப்பமாக மனதில் பட்டது. நம் ஊரிலே செய்திதாள்களில் நாம் வாசிக்கும் செய்திக்கும் உண்மைக்கும் இடைவெளி இருப்பது போல. நிச்சயம் காசாவைப் பற்றி நாம் வாசிக்கும் ஆங்கிலக் கட்டுரைகளுக்கும் அங்குள்ள எதார்த்த நிலைக்கும் மிகப் பெரும் இடைவெளி இருப்பதைப் பல சந்தர்ப்பங்களில் உணர்ந்துள்ளேன். இந்த இடைவெளியை நேரில் காண்பதுதான் இந்தப் பயணத்தின் நோக்கம்.

இதையெல்லாம் விட இந்திய நாட்டின் எல்லையை இதுவரை ஒருமுறை கூட நான் கடந்ததில்லை. பல நாடுகளை அதுவும் நம் வரலாற்றுடன், பண்பாட்டுடன் தொடர்புடைய மூத்த நாகரீகங்களின் ஊடே செல்லும் பயணம் என்றவுடன் என் ஆவல் இன்னும் பல மடங்காகப் பெருகியது. பொதுவாக என் நண்பர்கள் அனைவரும் சிங்கப்பூர், ஐரோபா சென்று வருவார்கள். என் முதல் வெளிநாட்டு பயணம் ஒரு சமூகம் பொறுப்பு மிக்க உலகின் துயரத்துடன் தொடர்புடையது என்கிற மகிழ்ச்சியுடன் பைசா காசு இல்லாமலும் எப்படியாவது நண்பர்களின் துணையுடன் கிளம்பிவிடலாம் என் நம்பிக்கையுடன் புறப்பட்டேன். ஏறக்குறைய ஒரு மாத காலம் நாங்கள் கடக்கும் இந்த எல்லா நாடுகளின் தூதரகங்களை எல்லாம் முட்டி மோதி விசா வாங்குவது என்பதே பெரும் அனுபவமாக அமைந்தது.

இந்தப் பயணத்தை ஏற்பாடு செய்தது மும்பையைச் சேர்ந்த நண்பர் பிரோஸ் மித்தீபோர்வாலா. இவர் பல ஆண்டுகளாகப் பாலஸ்தீனம் தொடர்புடைய உலக நிகழ்வுகளில் முக்கிய பங்காற்றி வருபவர். அவர்தான் இந்த ஆசிய பயணக்குழுவை ஒழுங்குச் செய்தவர். இந்தப் பயணக்குழு ஆசியாவின் 18 நாடுகளில் இருந்து 160 நபர்களை அழைத்து சென்றது. 18 நாடுகளில் இந்தக் குழுவின் நண்பர்கள் அனைவரும் US$1 மில்லியன் ருபாய் பெருமான நிதியையும் நிவாரணப் பொருட்களையும் திரட்டி அதனைக் காசாவுக்கு எடுத்துச் செல்வதுதான் பயணக்குழுவின் நோக்கம். உணவு பொருட்கள், ஆம்புலன்ஸ், மருந்துகள், அறுவை சிகிச்சை கருவிகள், கல்வி தொடர்புடைய உபக்கரணங்கள், கம்பளி-உடைகள் எனக் காசா மக்களின் உடனடி தேவைகளைக் கருத்தில் கொண்டுதான் இவை எல்லாம் தருவிக்கப்பட்டன.

இந்தப் பயணம் சாலை வழியாக செல்வதால் பல கலாச்சாரங்களுடன் கைக்குலுக்கிச் செல்வது மிகவும் புதிய அனுபவத்தைத் தந்தது. ஒவ்வொரு நாளும் புதிய நிலப்பரப்பு, புதிய மக்கள், புதிய மொழி என நான் இதுவரை புத்தகங்களில், புகைப்படங்களில், திரைப்படங்களில் மட்டுமே பார்த்த படித்த விடயங்களை நேரில் அனுபவித்தது வியப்பான அனுபவமாக இருந்தது. பலவித முகங்கள், பாவனைகள், நிறங்கள், உடைகள், மொழிகள், உணவுகள் என இந்தப் பயணம் மனிதகுல நாகரீங்கள் தோன்றிய நிலங்களின் ஊடே பயணித்தது, எங்கள் அனைவருக்குமே பிரமிப்பைத் தந்தது.

கேள்வி : பயணம் செய்த நகரங்களில் மக்களின் வரவேற்பு எப்படி இருந்தது?

பதில் : ஈரான், துருக்கி, சிரியா, லெபணன் என எங்கும் மக்களின் வரவேற்பு அமோகமாக இருந்தது. இந்த நாடுகளின் பாலஸ்தீன பிரச்சனை என்பது அவர்களின் சொந்த பிரச்சனை என்பதான உணர்வுதான் மேலோங்கியிருந்தது. பெண்கள், குழந்தைகள் எனப் பெரும் திரளான மக்கள் தெருக்களில் திரண்டு எங்களுக்கு வரவேற்பு அளித்தனர். இந்த நாட்டு அரசுகளும் எங்களைத் தங்களின் விருந்தினர்களாகவே நடத்தினார்கள். மிகவும் அன்பான உபசரிப்பு எங்களுக்கு வழிநெடுகிலும் காத்திருந்தது ஆச்சரியமாக இருந்தது. இதுதான் அவர்கள் பாலஸ்தீனத்தின் பால் கொண்டிருக்கும் அக்கறையின் வெளிப்பாடு.

கேள்வி: உங்கள் பயணத்தில் நீங்கள் சந்தித்த மனிதர்களைப் பற்றி கூறுங்கள். மேலும் பயணம் பல எல்லைகளைக் கடந்து செல்லவேண்டியதாக இருந்திருக்கும். எல்லைகள் உங்களுக்குள் தொகுத்த நினைவுகள் என்ன?

பதில் : இந்தப் பயணக்குழுவில் பல விதமான கதாபாத்திரங்கள் இடம்பெற்றிருந்தது ஒரு பெரும் வாழ்வியல் அனுபவமாகவே அமைந்தது. மெக்சசே விருது பெற்ற சந்தீப் பாண்டே, தெகல்காவின் முதன்மை ஆசிரியர் அஜித் சாகி, வகுப்புவாதத்தை எதிர்த்து காத்திரமாக இயங்கிவரும் சுரேஷ் கைர்நார் என ஏராளமான நபர்களுடன் 40 நாட்களை உரையாடியப்படிக் களிப்பது என்பது மிகவும் மகிழ்ச்சியாகவும், பயனுள்ளதாகவும் அமைந்தது. இவர்ளை எல்லாம் தில்லியில் சந்திப்பதே கடினம் ஆனால் இவர்களுடன் தினமும் பல மணி நேரம் விவாதங்கள், சர்ச்சைகள் என ஒவ்வொரு நாளும் புதிதாய் விடிந்தது.

இந்தப் பயணம் முழுவதுமே மறக்க முடியாத நினைவுகள்தான். இதன் ஒவ்வொரு கணமும் விசித்திரமான அனுபவங்கள் நிறைந்தது. அந்த அனுபவங்களை நான் விரிவாக எழுதிக்கொண்டிருக்கிறேன். விரைவில் அது நூல் வடிவத்தில் வெளிவரவிருக்கிறது. முதலில் எங்களுக்கு விசா வழங்க பாகிஸ்தான் மறுத்தது. அதன்பின் பாகிஸ்தான் விசா வழங்கிய நிலையில் இந்திய அரசு வாகாவில் எல்லையைக் கடக்க அனுமதி வழங்கவில்லை. அந்தச் சூழ்நிலையில் வாகா எல்லையில் நாங்கள் நடத்திய போராட்டம் மறக்க முடியாதது. ராணுவம் சூழ நாங்கள் வாகாவின் இந்த எல்லையில் போராட்டத்தை நடத்திய அதே நேரம், எல்லையின் மறுபுறம் பாகிஸ்தானில் எங்களை வரவேற்க அன்று காலை முதல் காத்திருந்த நண்பர்கள் அங்கு ஆர்பாட்டம் நடத்தினர். எல்லையின் இருபுறங்களின் நடந்த போராட்டம் சர்வதேச செய்தியாக மாறியது. அதனை அடுத்து காசாவுக்குச் செல்ல வேண்டிய நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு சலாம் என்கிற கப்பல் கிளம்பிய சில மணி நேரங்களில் இஸ்ரேலின் போர் கப்பல்களும் விமானங்களும் அதனைத் தொடர்ந்து பறந்து மிரட்டியதுதான் இந்தப் பயணத்தின் அரசியல் விளைவு உச்சமாக வெளிப்பட்ட தருணம். அனைவரையும் நெகிழ வைத்த தருணமும்.

கேள்வி : இந்தப் பயணத்தின் உச்சமாக காசா நிலப்பரப்பில் நீங்கள் அடைந்த அனுபவத்தைச் சொல்லலாமா? காசாவில் என்ன நடந்தது?

பதில் : பாலஸ்தீன ரஃபாவுக்குள் நுழைந்த பொழுது இரவு 12 மணிக்கு மேல் இருக்கும். அங்குள்ள ஹமாஸ் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பாலஸ்தீன அரசு (Palestine Authority) எங்களுக்குப் பெரும் வரவேற்பு அளித்தது. அதன் பின்பேருந்துகளில் ஏற்றி தங்கும் இடம் நோக்கி அழைத்துச் சென்றார்கள். இருளில் எதையும் காண இயலவில்லை. அன்றைய இரவு தொடர் உரையாடல்களுடன் நீண்டு சென்றது. அடுத்து நாள் காலை சிற்றுண்டியை வேகமாக முடித்து விட்டு எங்களைப் பேருந்துகளில் ஏற்றி எங்களின் காசா நிகழ்ச்சி நிரலைத் தொடங்கினார்கள். பேருந்தின் சக்கரங்கள் நகர தொடங்கியதும் ஒரு பெரிய அமைதி நிலவியது. திரும்பும் திசையெல்லாம் குண்டு வெடிப்பில் சேதமடைந்த கட்டிடங்கள், சிதைந்த மருத்துவமனைகள், பிளந்து கிடக்கும் பல்கலைக்கழகங்கள் துறை கட்டிடங்கள், ஊனமான சிறுவர்கள், பெரியவர்கள், குழந்தைகளைச் சுமந்து உணவு பொருட்களுக்காக வரிசையில் நிற்கும் தாய்மார் – இவை எல்லாம் படித்து அறிந்தபோது ஏற்படுத்திய உணர்வுகள் வேறு ஆனால் ஒரு யுத்தபூமியை நேரில் காண்பதென்பது முற்றிலும் வேறான ஒரு மனம் சார் வேதியியல். அறுபது ஆண்டுகள் தாக்குதல்களைச் சந்தித்த நிலப்பரப்பு என்பது அதனைக் காணும் போதே தழும்பேறித் தெரிந்தது. என் அன்றைய தினம் முழுவதும் அழுகையும் விசும்பல்களுடன்தான் கழிந்தது. கண்ணீரை அடக்க முடியவில்லை. ஹமாஸின் ஓர் அதிகாரி என் தோள்பட்டையைத் தட்டிக் கொடுத்து நன்றாக மனம் விட்டு அழுங்கள், காசா வருபவர்கள் எல்லாம் இப்படித்தான் அழுவார்கள். நீங்கள் பார்க்கும் இந்தக் காட்சிகளை உலகிற்கு எடுத்து சொல்லுங்கள் என்றார்.

காசாவின் ஏறக்குறைய அனைத்துப் பகுதிகளுக்கும் நாங்கள் சென்றோம். அல் ஷத்தி, புரேஜி, தேர் அல் பலாஹ், மகசப், ரஃபா, ஜபாலியா, தல் அஸ் சுல்தான் என எல்லா முகாம்களுக்கும் சென்று வந்தோம். (Al Shati, Bureji, Deir al-Balah, Maghaz, Nuseirat, Rafah, Jabalia, Tall as-Sultan). அதன் பின் அல் ஷிபா (Al hifa) மருத்துமனைக்குச் சென்றோம்.

அங்குள்ள யாசர் அராபத் சர்வதேச விமான நிலையம் 1998ல் இஸ்ரேலால் முற்றிலும் நாசமாக்கப்பட்டது. அது முதல் அங்கு நிர்மானப் பணிகள் நடைபெறவில்லை.

உலக தொடர்புகள் எல்லாம் முற்றாக மறுக்கப்பட்டு ஒரு தீவைப் போல்தான் காசா காட்சியளிக்கிறது. இஸ்ரேல் அதனைக் கடல், நிலம், ஆகாயம் என எல்லா திசைகளிலும் சூழ்ந்துள்ளது. எகிப்துடன் அவர்களுக்கு உள்ள சுமார் 5 கி.மீ நில தொடர்பு மட்டுமே இந்த உலகத்துடன் உரையாட ஒரே பாதை. இருப்பினும் எகிப்து அதிபர் முபாரக் கடந்த காலங்களில் அமெரிக்கா-இஸ்ரேலின் கை பாவையாக இருந்ததால் காசாவுக்கு இந்தப் பாதையும் கூட முற்றாக ஒரு தடைத்தான். பொருளாதார தடை, வர்த்தகத் தடை, மருத்துவத்திற்குக் காசாவை விட்டு வெளியே வர இயலாது, உயர் படிப்புக்கு வர இயலாது, வேலை வாய்ப்புகள் தேடி இளைஞர்கள் வெளியே வர இயலாது என உலகில் உள்ள அத்தனை தடைகளும் காசாவில், மேற்கு கரை என எங்கும் அமலில் உள்ளது. காசாவைப் பொருத்தவரை அதன் 350 சதுர கிமீ நிலப்பரப்பில் வாழும் 17 லட்சம் மக்களுக்கு அது ஒரு திறந்த வெளி சிறைச்சாலைத்தான், போதா குறைக்கு இஸ்ரேல் அவர்களின் வான்மீது அனுப்பும் குண்டுகள் இலவச இணைப்பாகும். இஸ்ரேலுடனான 70கிமீ எல்லை நெடுகிலும் ஏறக்குறைய சுமார் 4 கிமீ தூரம் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாத திறந்த வெளி (Buffer Zone). இந்த நிலபரப்பு விவசாயத்திற்கும், தாக்குதல் காலத்தில் தற்காப்பிற்கும் பயன்படுத்தப்படுகிறது. மிச்சமுள்ள இடத்தில்தான் 17 லட்சம் பேர் வாழ்ந்து வருகிறார்கள். அதாவது ஒரு சதுர கிமீக்கு 4118 பேர். இதுதான் உலகின் மக்கள் மிக அடர்த்தியாக வசிக்கும் பகுதி. காசாவில் வாழும் மக்களில் 80% பேர் ஏழைகள், நிவாரணங்களை நம்பி வாழ்பவர்கள்.

கேள்வி : தாக்குதலுக்குப் பலியாகிக்கொண்டிருக்கும் காசாவின் பொது மக்கள் எந்த மாதிரியான அரசியல் பார்வையையும் மனத்திடத்தையும் கொண்டுள்ளார்கள்?

பதில் : அங்குள்ள பல குடியிருப்பு வளாகங்களுக்கு, வீடுகளுக்குச் செல்லும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது. வீடுதோறும் பலரை இந்தப் போரில், இஸ்ரேலின் தாக்குதலில் பலி கொடுத்துள்ளார்கள். அனைவரின் வீட்டிலும் இறந்தத் தியாகிகளின் படங்கள் வரிசையாக உள்ளன. அவர்களின் வீட்டின் மீது குண்டு விழுந்து சேதமடைந்த பகுதி என அவர்கள் இவைகளை எல்லாம் மிகுந்த பெருமிதத்துடன் எங்களுக்கு எடுத்துரைத்தார்கள். அவர்களின் வீடுகள் மீது குண்டுகள் பல முறை விழுந்ததை ஒரு விருது பெற்ற உணர்வுடன்தான் அவர்கள் விவரிக்கிறார்கள். பொதுவாகக் காசாவில் உள்ள மக்கள் தங்களை இந்த உலகம் கைவிட்டது போல் உணருகிறார்கள். பாலஸ்தீனத்துடன் நல்லுறவில் இருந்த பல நாடுகள் இன்று இஸ்ரேலின் நட்பு நாடுகளாக மாறிவருவது குறித்து அவர்களுக்கு வருத்தமே. இருப்பினும் காசாவின் ஒரு அங்குலத்தைக்கூட இனி விட்டுக் கொடுக்க இயலாது என்பதில் அனைவரும் உறுதியாக உள்ளனர்.

எங்களுக்கு நிவாரணங்களை விட உங்கள் ஆதரவுதான் பெரியது என்று பல பெரியவர்கள் எங்கள் கைகளைப் பற்றி கூறிய வார்த்தைகள் அவர்களின் அரசியல் தெளிவை, மனத்திடத்தைக் காட்டியது.

ஒரு திறந்த வெளி சிறைச்சாலையில் அடுத்த நாள் என்ன நடக்கும் என்பது குறித்த தெளிவுகளற்ற பின்புலத்தில் அவர்கள் இன்றைய உலக ஏகாதிபத்தியமான அமெரிக்கா – இஸ்ரேலை எதிர்த்து வீரத்துடன் போரிடுவதைப் பார்க்கும் போதும் நம் நாட்டில் உள்ள நிலையை யோசிக்கவே வருத்தமாக இருந்தது. அவர்களுக்கு இழக்க இனி எதுவும் இல்லை, நம்மிடம் இழக்க இன்னும் ஏராளமாக உள்ளது.

கேள்வி : புனித தலங்களில் என்ன மாதிரியான நடவடிக்கைகள் நடக்கின்றன?

பதில் : அங்கு உள்ள பள்ளிவாசல்கள் அடிக்கடி ஏவுகணைகளின் இலக்காக உள்ளது. நான் சென்ற பல பள்ளிவாசல்களில் கட்டிட வேலை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அங்கும் ஏழைகள், கொஞ்சம் வசதி படைத்தோர், பணக்காரர்கள் எனும் வித்தியாசத்தைக் காண முடிந்தது. வீடுகளில் வசிப்பவர்கள், முகாம்களில் தங்கியுள்ளவர்கள் என பல தரப்பினரும் உள்ளனர். கைத் தொழில் செய்பவர்கள், சிறிய மூலதனத்தில் தொழில் செய்பவர்கள், மீன் பிடிப்பவர்கள், சிறு பாத்திகளில் விவசாயம் செய்பவர்கள், குண்டுகள் விழுந்து நொருங்கும் கட்டிடங்களின் இடிபாடுகளை எல்லை பகுதிக்கு எடுத்து வந்து மீண்டும் அதனை கட்டிடம் கட்டும் கச்சா பொருளாக மாற்றுவது எனப் பலதரப்பட்ட தொழில்கள் அங்கு உள்ளன. இருப்பினும் மிக விசித்திரமானது அங்கு உள்ள ரஃபாவின் இருபுறங்களில் உள்ள வியாபாரிகள் ஆயிரக்கணக்கான சுரங்கங்கள் அமைத்து அதில்தான் எல்லா பொருட்களையும் இங்கு எடுத்துவருகிறார்கள். எகிப்து ரஃபா பக்கம் இருக்கும் சுரங்கத்தின் வாயிலில் உள்ளே நுழையும் பொருள் காசாவுக்கு வரும் பொழுது அதன் விலை பல மடங்காக உயர்கிறது. சுரங்கம் வெட்டுதல் அங்கு ஒரு மிகப் பெரும் தொழிலாகவே உள்ளது. இந்தச் சுரங்களின் மீது ஏவுகணை தாக்குதல் நடப்பது மிகவும் சகஜமானது.

மின்சாரம்தான் பெரும் தட்டுப்பாடானது. மின்சாரத்தை மிகவும் கவனமாகவே செலவிடுகிறார்கள். பல மணி நேரம் மின் வெட்டு அங்குள்ளது. ஹமாஸ் தேர்தலில் வெற்றிபெற்ற அடுத்த நாள் காசாவின் முக்கிய மின்சாரம் தயாரிக்கும் நிலையத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் தொடுத்தது. இஸ்ரேல், எகிப்து ஆகிய இரு நாடுகளில் இருந்து தான் பெரும் விலை கொடுத்து மின்சாரமும், எண்ணையும் வாங்குகிறார்கள். உலகம் முழுவதில் இருந்தும் அங்கு ஏராளமான குழுக்கள் நிவாரண உதவிகள் கொடுத்து வந்தாலும், அங்கு யாரும் கட்டுமான பொருட்களை, மின்சாரம் தயாரிக்கும் ஜெனரேட்டர்களை எடுத்து செல்லத் தடையுள்ளது. நாங்கள் வாங்கிய 4 பெரும் சோலார் ஜனரேட்டர்களைக் கூட சிரியாவிலேயே அந்தக் கப்பலில் ஏற்ற மறுத்து விட்டார்கள்.


கேள்வி : பாலஸ்தீன பொதுமக்களின் பெரும்பான்மையான ஆதரவைப் பெற்று செயல்பட்டுக்கொண்டிருக்கும் அமைப்பு எதுவாக இருக்கிறது?

பதில் : ஹமாஸ் தான் அங்கு மக்களின் பெரும் ஆதரவை பெற்ற அமைப்பாக உள்ளது. அவர்கள் காசாவின் நிர்வாகத்தைத் திறம்பட நடத்துகிறார்கள். பத்ஹ் மேற்குகரையில் ஆட்சியில் உள்ள போதும் கொள்கை ரீதியாக மிகவும் நீர்த்துவிட்டார்கள். பத்ஹ் மேற்குகரையில் தேர்தலில் வெற்றி பெற்ற ஹமாஸின் பல தலைவர்களைச் சிறைவைத்துள்ளது. இந்த இரு பெரும் அரசியல் இயக்கங்களின் பிளவு இஸ்ரேலுக்கு நல்ல வாய்ப்பாக உள்ளது.

கேள்வி : பாலஸ்தீனத்திற்கு வெளியில் வாழும் அகதிகள் தனியொரு சமூகமாக உருவாகி வருவதாக உணர்கிறேன். உங்களின் பார்வையில் அகதிகள் எப்படி நடத்தப்படுகிறார்கள்? அது குறித்து தகவல்கள் ஏதேனும் கிடைத்ததா?

பதில் : இன்று பாலஸ்தீனப் பிரச்சனையை உலகம் முழுவதிலும் முன்னின்று தலைமையேற்று நடத்தும் தலைவர்களில் 90% பேர் அகதி முகாம்களில் பிறந்தவர்களே. அவர்கள் பலர் பாலஸ்தீனத்திற்கே சென்றதில்லை. சிரியா, லெபனான், ஜோர்டன் என இந்த தேசம் எங்கும் பாலஸ்தீன அகதிகள் சிதறிக் கிடக்கிறார்கள். அவர்களின் முகாம்கள் பெரும் நகரங்களாகவே உருமாறியுள்ளன. இந்த நாடுகளில் பாலஸ்தீன அகதிகளுக்குச் சில வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்குப் பள்ளி, கல்வி, வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு உள்ளது. எல்லாம் இருந்த போதும் அவர்கள் அனைவரும் தாயகம் திரும்பு நாளுக்காய் காத்திருக்கிறார்கள். இந்த நாடுகளில் உள்ள அகதிகள் முகாம்களில் எங்களுக்குச் சிறப்பு கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த முகாமில் உள்ள குழந்தைகளுடன் கால்பந்து விளையாடினோம். கால்பந்துதான் இவர்களை உலகுடன் இணைக்கும் மொழியாக உள்ளது. எங்களுடன் முதலில் பேச மறுத்த குழந்தைகள் விளையாட்டுக்கு பின் தினமும் எங்களைச் சந்திக்க சிரியாவின் துறைமுக நகரமான லத்தாக்கியாவில் உள்ள விடுதிக்கு வந்தார்கள். பார்க்கும் போதும் இந்த அகதிகள் முகாமில் உள்ளவர்களுக்கு இருக்கும் உத்திரவாதங்களும் பாதுகாப்புகளும் காசாவில் வாழும் மக்களுக்கே இல்லை.

கேள்வி : பாலஸ்தீன நிலப்பரப்பில் இஸ்லாமியர்கள் ஒடுக்கப்படுவதை முன்வைத்து பார்க்கும்போது ஏன் இஸ்லாமியர்களுக்கு அப்படியொரு நிலை எனக் கேள்வி எழுகிறது.

பதில் : அரபு நாடுகள் பல விதங்களில் பிளவுபட்டு கிடப்பதுதான் இஸ்லாமியத்தைச் சூழ்ந்துள்ள பெரும் நெருக்கடியாக நான் பார்க்கிறேன். அமெரிக்க ஏகாதிபத்தியமும், ஐரோப்பாவும் வளைகுடா நாடுகளை ஒரு சந்தையாக மட்டுமே பாவித்து வருகிறது. அமெரிக்கா எண்ணெய்க்கான யுத்தம் என்பதை ஒரு நூற்றாண்டுக்கு முன்பே தொடங்கி விட்டது. ஜனநாயகத்துடன் மக்களுக்கான அடிப்படை உரிமைகளுடன் திகழவேண்டிய நாடுகள் எல்லாம் அமெரிக்காவின் கைப்பாவைகளாக அரசுகளை நிறுவி கடந்த ஐம்பது ஆண்டுகளாக அமெரிக்காவின் வெளியுறவு கொள்கைப்படிதான் இந்தப் பகுதி மாற்றி மாற்றி அடுக்கப்படுகிறது. நான் பயணித்த நாடுகளில் பாலஸ்தீனப் பிரச்சனை என்பது அவர்களின் சொந்த பிரச்சனையாகவே கருதப்படுகிறது. இஸ்லாத்தில் உள்ள ஷியா-சன்னி பிளவுகள் அரபு நாடுகள், ஈரான் என அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட தடையாக உள்ளது. பாலஸ்தீன மக்களைப் பொறுத்தவரை உங்களின் சொந்த விருப்பு வெறுப்புகளை எங்களின் பிரச்சனையிலாவது விலக்கி வைத்துவிட்டு ஒன்றிணைந்து போராடுங்கள், இந்த ஒற்றுமையான போராட்டம் மொத்த பகுதியின் விடுதலைக்கான போராட்டமாக மலரும் என்கிற நம்பிக்கையுடன் அவர்கள் களத்தில் இருக்கிறார்கள்.

கேள்வி : உங்கள் பயணத்தில் நீங்கள் சந்தித்த அரசியல் தலைவர்கள்/அதிபர்கள்/அரசு என அனைவரிடத்திலும் நட்பு பாராட்டுதல் எப்படி இருந்தது? அவர்களுடன் நீங்கள் கலந்துகொண்ட நிகழ்வுகள் பற்றி பகிர்ந்துகொள்ளுங்கள்.

பதில் : ஈரானில் அந்த நாட்டின் அதிபர் அஹமதேநிஜாத் எங்கள் பயணக்குழுவை தெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் வந்து சந்தித்து வாழ்த்தினார். அன்று இரவு அவர்களின் புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் எங்களுக்குப் பெரும் அரச விருந்தளித்தார். உணவுக்குப்பின் அவர்களின் தொன்மையான பாராளுமன்றமான மஜ்லீசில் எங்களுக்கு ஒரு பாராட்டு விழாவும், ஈரானின் பாரம்பரியமிக்க வெள்ளி மோதிரமும் அணிவித்தார். ஈரானின் அனைத்து நகரங்களிலும் வரவேற்பும் விருந்தும் அந்த நகரங்களின் மேயர்கள் தான் ஏற்பாடு செய்தார்கள். பயணம் வரும் தகவல் ஊடகங்களில் தினமும் வெளிவர ஏற்பாடுகளில் அவர்களுக்குள் ஒரு போட்டியே நிலவியது.

சிரியாவின் அரசாங்கமே எங்களை எல்லைக்கு வரவேற்க வந்தது. தலைநகர் தமாஸ்கசில் நாங்கள் ஒரு வார காலம் தங்கியிருந்தோம். அங்குள்ள எல்லா அரசியல் குழுக்களும் எங்களைத் தினமும் வந்து சந்தித்து பாலஸ்தீனம் தொடர்பாக விவாதித்து உரையாடின. ஹமாசின் அரசியல் தலைவர் காலித் மிஷால் எங்களுடன் ஐந்து மணி நேரம் இருந்தார். மொசாத்தின் தாக்குதல்களால் பல முறை மரணப்படுக்கையில் இருந்து மீண்டு வந்த காலித் மிஷாலை சந்தித்தது மிக மறக்க முடியாத ஒரு நெகிழ்வான சந்தர்ப்பம்.

பாலஸ்தீன அரசின் பிரதமர் இஸ்மாயில் ஹானியா அவர்களைச் சந்தித்தோம். பிரதமர் அலுவலகத்தில் நடந்த வரவேற்பு நிகழ்வில் காசாவில் உள்ள அனைத்து இயக்கங்களின் தலைவர்களும் அழைக்கபட்டிருந்தனர். பல அடுக்கு பாதுகாப்புடன் இந்தக் கூட்டம் நடந்தது. காசாவின் மனநிலை எத்தகைய கொந்தளிப்புடன் உள்ளது அவர்களின் எதிர்பார்ப்புகள் எனப் பல விஷயங்கள் சார்ந்த தெளிவு கிடைத்தது. இருப்பினும் அனைத்து இயக்கங்களும் ஒன்றினைத்து எங்களை அரசு சார்பாக வரவேற்றது அனைவருக்கும் மகிழ்ச்சியை, நம்பிக்கையை அளித்தது. பத்ஹ்-ஹமாஸ் அமைப்புகள் சில புள்ளிகளில் இணைந்து செயல்படுவது தொடர்பாக தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளபட்டு வருகின்றன. பத்ஹ் மேற்குகரையில் ஏராளமான ஹமாஸ் ஊழியர்களை சிறையில் அடைத்து வைத்திருப்பது தான் இந்த நடைமுறைகளுக்குத் தடையாக உள்ளது. இந்தக் கைது நடவடிக்கைகளுக்காக இஸ்ரேல் பத்ஹ் அமைப்பைப் பாராட்டியுள்தை இங்குக் குறிப்பிட விரும்புகிறேன்.

விவா பாலஸ்தீனா (Viva Palestina), ப்ரி காசா (Free Gaza) ஆகிய பல்வேறு அமைப்புகளின் மூலம் இதற்கு முன்பே காசா வந்து சென்ற அனுபம் உள்ள பலர் எங்களுடன் வந்ததும், அவர்களின் அனுபவங்களும் பல புதிய வெளிச்சங்களை அளித்தது.

கேள்வி : பாலஸ்தீன் மீதான இஸ்ரேல் நடத்தும் சுரண்டலில் இந்தியா எந்தவிதமான பார்வையைக் கொண்டிருக்கிறது?

பதில் : இந்தியாவில் பாஜக – காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் அமெரிக்க அடிமை சாசனத்தை இந்திய அரசியல் சாசனமாக மாற்ற வித்தியாசங்கள் இன்றி ஒற்றுமையுடன் பாடுபடுவது நாம் அறிந்ததே. யாசர் அராபத்துடன் நம் தலைவர்கள் நின்ற புகைப்படங்கள் மங்கலாக மாறி இன்று அமெரிக்கா இஸ்ரேலுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் நம் பிரதமர்களின் புகைப்படங்கள்தான் பிரகாசிக்கிறது. இஸ்ரேலின் ஆயுதங்களில் பெரும் பகுதியை வாங்கிக்குவிக்கும் நாடுதான் இந்தியா. இந்தியா ஆயுதங்களை மட்டும் வாங்கிக் குவிக்கவில்லை மாறாக அமெரிக்கா இஸ்ரேலுடன் பல கூட்டு ராணுவப் பயிற்சி ஒப்பந்தங்களையும் கையெழுத்திட்டுள்ளது. நாங்கள் காசாவுக்குள் நுழைந்த அதே நேரம் பாஜக தலைவர் நிதின் கட்கரி ஒரு குழுவுடன் இஸ்ரேலுக்குள் நுழைந்தார். சமீபமாக இந்திய இஸ்ரேல் வர்த்தகம் தொடர்புடைய ஒரு மாநாட்டுக்கும் திட்டமிடப்பட்டுள்ளது. அரசியல் ரீதியாக இருக்கும் இந்திய மக்களின் மந்தையான மனோபாவத்தில் இவை எல்லாம் இங்கு ஒரு பொருட்டே இல்லை. காஷ்மீரில் என்ன நடக்கிறது என்பதைக் கூட அறியாத இந்தக் கூட்டம் பாலஸ்தீனம் – இலங்கை என எதற்கும் எழுந்திடாது.

கேள்வி : ஹமாஸ் அமைப்பு பற்றி ஏதேனும் தகவல்கள் கிடைத்தனவா?

பதில் : ஹமாஸ் அமைப்பு 1987ல் எகிப்தின் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் ஓர் அங்கமாகவே தொடங்கப்பட்டது. இஸ்ரேலிடம் இருந்து பாலஸ்தீனத்தை மீட்டெடுப்பதற்கே ஹமாஸ் நிறுவப்பட்டுள்ளது என அதன் நிறுவனர் ஷேக் அஹமத் யாசின் அறிவித்தார். ஹமாஸின் மஜ்லிஸ் அல் ஷூரா தான் அரசியல் திட்டத்தைத் தீர்மானிக்கும் தலைமை குழு. அகதிகள் முகாம்களில் பள்ளிகள், மருத்துவமனைகள் நடத்துவது முதல் விளையாட்டு, இலவச உணவு விடுதிகள், அனாதை இல்லங்கள், மசூதிகள் என ஹமாஸ் தனக்குக் கிடைக்கும் நிதி உதவிகளில் 90%த்தை இது போன்ற திட்டங்களுக்குச் செலவிடுகிறது. பாலஸ்தீனத்தில் நான் பார்த்தவரை உலக ஊடகங்கள் கூறுவது போல் பெரும் ராணுவ பலம் பொருந்திய படைகள் எல்லாம் இல்லை மாறாக அங்கு இருப்பதோ ஒரு தற்காப்புப் படை (Self Defence Force) மட்டுமே. இஸ்ரேல் இவர்களின் பகுதிகளுக்குள் வந்து தாக்கும் போது மட்டுமே இவர்கள் தங்களின் கொரில்லா தற்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்.

கேள்வி : இந்தப் பயணத்தின் வழி உருவான தனித்துவம் என்ன? இதற்கு முன் அங்குப் போய் வந்த பயணக்குழுக்களிடமிருந்து நீங்கள் எப்படி வேறுபடுகிறீர்கள்?

பதில் : எங்கள் பயணம் பல வழிகளில் தனித்துவம் வாய்ந்ததாக அமைந்தது. இதுவரை ஏராளமானப் பயணக்குழுக்கள் நிவாரணங்களை எடுத்து காசா சென்றுள்ளன. ஆனால் மாவிமாவர்மா தாக்குதலுக்குப் பிறகு உலக ஊடகங்களின் முக்கிய செய்தியாக 20 நாட்கள் பரபரப்பாக இருந்தது இந்த ஆசிசா காரவாண் தான். வாகா எல்லையில் இந்திய-பாகிஸ்தான் அரசுகளைச் சமாளித்துச் சென்றது முதல் எகிப்து விபத்து வரை காசா பற்றியும் அங்கு எடுத்துச் செல்லப்படும் நிவாரணப் பொருட்கள் பற்றியும் செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. இன்று இந்திய தேசத்திற்கு ஆசியாவில் இருக்கும் மதிப்பு என்ன என்பதே இந்தப் பயணத்தில் தான் முழு பரிணாமத்துடன் விளங்கிக் கொள்ள முடிந்தது. இந்த ஆசியா காரவானில் இந்தியர்களின் பங்களிப்பு என்பது மக்களாலும் அரசுகளாலும் பெரிதாக வரவேற்கப்பட்டது.

இரு நாடுகளின் அதிபர்கள் ஒரு பயணக்குழுவை நேரில் வந்து வாழ்த்தியது இதுவே முதல் முறை. 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியர்கள் பாலஸ்தீனத்திற்கு வருவது அந்த மக்களின் பெரிதும் நம்பிக்கையில் ஆழ்த்தியது. ஆனால் மறுமுனையில் இஸ்ரேல் எங்களைத் தினம் தினம் அதன் இணையத்தளங்களில் ஒரு தீவிரவாதிகளின் பயணக்குழு என்று வசைபாடியது. இது இஸ்ரேலுக்கு இந்திய பங்கேற்பு சார்ந்து ஏற்பத்திய ஒவ்வாமைதான் என்று ராணுவ, வெளியுறவு ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இந்தியர்கள் இந்த நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட வேண்டும் என்பது தான் இந்த பிரதேசத்தின் கோரிக்கையாக இருந்தது.

முதலில் இந்தப் பிரச்சனையை ஆழமாக அறிந்து கொள்வது அவசியம் என்பதால் கடந்த மூன்று மாதங்களாகத் தீவிர வாசிப்பில் ஈடுபட்டு வருகிறேன். வாசிப்பு அடுத்து அடுத்து பல ஆய்வாளர்களை நோக்கி ஒரு கன்னியாக நீண்டு செல்கிறது. இருப்பினும் வாசிப்பும் நடவடிக்கைகளையும் இணையாக நடக்கட்டும் என்ற மனநிலைக்கு வந்தேன். நாடு திரும்பியதில் இருந்து இந்தப் பயணத்தில் இணைந்த 7 பேர் தொடர் நடவடிக்கைகளுக்காகத் திட்டமிட்டு வருகிறோம். இஸ்ரேல் – பாலஸ்தீனம் அமைதி நடவடிக்கைகள், 1967 எல்லையுடன் இருநாடு பிரகடன், இரு நாட்டு மக்களின் மத்தியிலான உரையாடல்கள், காசா மீதான தடைகள் தளர்த்த வழியுறுத்தல் என பல திசைகளில் நடவடிக்கைகளின் ஆசிய அளவில் ஒருங்கிணைக்க ஏற்பாடுகள் செய்து வருகிறோம். விரைவில் அமைப்பும் அதன் நடவடிக்கைகள் பற்றிய அறிவிப்பை வெளியிடவிருக்கிறோம்.

கேள்வி : இஸ்ரேலின் இத்துணைக் கொடூரமான ஒடுக்குமுறைகளுக்கு ஆளான பின்பும் தொடர்ந்து போராடுவதற்கான மனவலிமையை காசா மக்கள் கொண்டிருப்பது பெரும் பிரமிப்பை அளிக்கிறது அல்லவா?

பதில் : சந்தீப் பாண்டேயின் கூற்று முற்றிலும் உண்மையானது. காசாவின் மக்களை யாராலும் தோற்கடிக்க முடியாது. அறுபது ஆண்டுகள் இத்தனை தாக்குதல்களைச் சந்தித்தவர்கள் மனம் தளராதவர்களாக இன்னும் இன்னும் எத்தனை கஷ்டங்களையும் தங்களின் பூமிக்காய் சந்திக்கச் காத்திருப்பவர்களாக இருக்கிறார்கள். அல் குத்ஸை (Al-Quds/Baitul-Maqdis), அல் அக்சாவை (Al-Aqsa) இன்னொரு முறை பார்த்தால் போதும், அங்கு ஒரு முறை தொழுது விட்டால் போதும் இந்த மனம் நிம்மதியாகிவிடும் என்பது மட்டுமே அவர்களில் பலரது வாழ்நாள் ஆசையாக உள்ளது. அவர்களின் மனதிற்கு மிகவும் நெருக்கமான ஜெருசலத்தை மீட்க வேண்டும் என்பதும் அவர்களது தீரா ஏக்கம். காசாவின் பிரதமர் அலுவலகத்தில் கூட ஒரு மைல் கல் உள்ளது அதில் ஜெருசலேம் 79.37கிமி என்று பொறிக்கப்படுள்ளது.

மருத்துவமனைகளில் மரணப்படுக்கையில் மருந்துகளின்றி அவதிப்படுபவர்கள் கூட சுயமரியாதையை விட்டுக் கொடுக்க சம்மதிக்காதவர்களாக இருக்கிறார்கள். இந்தப் பயணம் நெடுகிலும், காசாவுக்குள் நுழையும் போதும் ஏதோ காசா மக்களுக்கு உதவ செல்கிறோம் என்பதன் உணர்வுதான் இருந்தது. ஆனால் காசாவைச் சுற்றி விட்டு அந்த மக்களின் உணர்வுகளை எல்லாம் பார்த்தபோது நான் இவர்களுக்குச் செய்வதற்கு எதுவுமில்லை மாறாக இவர்களிடம் இருந்து நிறைய கற்று வெளியேருகிறேன் என்றே உணர்ந்தேன். ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒரு வீரம் செறிந்த போராட்டத்தை இந்த மக்கள் நடத்தி வருகிறார்கள். இந்தப் போராட்டம் இந்த உலகிற்குப் பல படிப்பினைகளை வழங்குகிறது.

கேள்வி : உங்கள் பயணத்தில் மறக்க முடியாத சம்பவமாக இருந்தது எது?

பதில் : நாங்கள் தங்கியிருந்த லத்தாகியாவின் விடுதியின் வரவேற்பு அறையில் நான் என் மடிக்கணிணியில் தூதரகங்களுக்கான சில கடிதங்களை எழுதிக் கொண்டிருந்த போது பெண்மணி ஒருவர் உள்ளே வந்தார். ஆசியாவின் பாலஸ்தீனப் பயணக்குழு தங்கியிருக்கும் விடுதி இதுதானா என்று கேட்டார். ஆம் என்றதும், தான் பாலஸ்தீனத்தை சேர்ந்தவள், லத்தாக்கியாவின் பாலஸ்தீன அகதி முகாமில் பிறந்தது முதல் தன் கதையை மிகச் சுறுக்கமாக விறுவிறுவென கூறினார். பிறந்தது முதல் அவர் பாலஸ்தீனம் சென்றதில்லை, பாலஸ்தீனத்தை மீட்பது தொடர்பான சகல சமூக-அரசியல் இயக்கங்களில் அவர் மிகவும் விருப்பத்துடன் பங்களித்து வருவது மட்டுமே தான் பாலஸ்தீனத்தை உணருவதற்கான வழிமுறையாகவும், தன் நிலத்தை நினைவுகளில் சுமப்பதற்கான ஒரே வழி என்றார். இந்தப் பகுதி முழுவதிலும் உள்ள பாலஸ்தீனர்கள் தங்கள் தாய்நாட்டிற்கு அதன்பின் சென்றதே இல்லை. அவரது குடும்பம் 1948ல் இஸ்ரேலின் ராணுவத்தால் விரட்டப்பட்ட லட்சக்கணக்கான குடும்பங்களில் ஒன்று. தன் தாத்தா-பாட்டி காலத்தில் இருந்தே அகதிகளாக இங்கு இவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். சிரியாவில் மட்டும் அல்லாது லெபனான், ஜோர்டன், ஏகிப்து நாடுகளிலும் பல அகதி முகாம்கள் உள்ளன. இந்த வளைகுடாவில் உள்ள நகரங்கள் அனைத்திலும் பாலஸ்தீனர்கள் இல்லாத நகரமே இல்லை எனலாம். நாடிழந்தவர்களின் சோகம் ஒரு கருத்த மேகம் போல இந்த வளைகுடா முழுவதின் மீதும் ஒரு நிழல் போல் மிதந்து வருகிறது.

நாடிழந்தவர்களின் மனநிலை மிகவும் துயரமானது என்பதை அவர்களைச் சந்தித்த மாத்திரத்தில் ஒருவரால் உணரமுடியும். கடந்த 25 நாட்களாக நான் சிரியா, லெபணனில் உள்ள பாலஸ்தீன அகதி முகாம்களின் மக்களைச் சந்தித்து வருகிறேன். இந்த நாடுகள் அவர்களை நல்ல முறையில் பாதுகாத்து- வசதிகள் செய்து கொடுக்கும் போதிலும் அவர்களின் முகம் எல்லாம் நாடிழந்த தவிப்பு குவிந்து கிடக்கிறது. இங்குள்ள குழந்தைகள் அனைவரும் தங்களின் பள்ளி புத்தகப்பையில், புத்தகங்களில் பல பாலஸ்தீனச் சின்னங்களை வரைந்துள்ளன. பாலஸ்தீனம் தொடர்பான பல பாடல்கள் இவர்களின் தேசிய கீதமாக உள்ளது.

அந்தப் பெண், தான் ஒரு சாதாரண வேலையில்தான் உள்ளதாகவும், அதிகம் படிக்காததால் தன் சம்பளமும் குறைவானதுதான் எனக் கூறினார். இதை ஏன் என்னிடன் தெரிவிக்கிறார் என ஒரு கனம் குழம்பிப்போனேன். பேசிக் கொண்டே தன் கைப்பையில் இருந்து 5000 சிரிய பவுண்டுகளை எடுத்து என் கையில் கொடுத்தார். நான் வாங்க மறுத்தேன். இது எதற்கு என்பதை முதலில் சொல்லுங்கள் என்றேன். கண்களில் நீர் ததும்ப இதனை நீங்கள் காசாவில் சந்திக்கும் ஏதேனும் ஒரு குடும்பத்திடம் கொடுங்கள் என்றார். அழுது கொண்டே மெல்ல அங்கிருந்து கிளம்பினார். அவர் கிளம்பியதும் நானும் மெல்ல அவருடன் நடக்கத் தொடங்கினேன். எங்கள் இருவர் மத்தியிலான உரையாடலை மொழிப்பெயர்த்தவர் விடுதியிலேயே இருந்துவிட்டார். நான் தெரு முனைவரை அவருடன் நடந்தேன். அங்கிருந்தச் சாலை கடற்கரை வழியாக அகதிமுகாம் வரை சென்றது. நான் கடந்த மூன்று நாட்களாக அந்த முகாமுக்குச் சென்று வருவதால் அந்தச் சாலையும் பாதையும் எனக்குப் பரிச்சயமாகி இருந்தது. அரபி எனக்குத் தெரியாதது ஒரு குறையாகவே இல்லை. நாங்கள் அந்த நீண்ட கடற்கரை சாலையைக் கடந்தோம். என் தொலைபேசி ஒலித்ததால் நான் என் கோட் பையில் துளாவி அதை எடுத்தேன். அதற்குள் அவள் அருகில் இருந்த நெரிசலான தெருவுக்குள் சென்று மறைந்தாள். நாடிழந்தவர்களின் தூதுவனாக என்னை உருமாற்றி அவள் மறைந்தாள்.

கேள்வி : பயணத்தின்போது இராணுவமும் அதிகார வர்க்கமும் உங்களிடம் எப்படி நடந்துகொண்டன? ஏதேனும் தடைகளை ஏற்படுத்தினார்களா?

பதில் : இந்த மொத்த பயணத்தில் எங்களை மிகக் கேவலமாக நடத்தியது ஏகிப்து மட்டுமே. ஏகிப்தின் ராணுவம் மற்றும் காவல்துறையின் அதிகாரிகள் எங்களை குற்றவாளிகளைப் போலவே நடத்தினார்கள். எங்களை இப்படியாக நடத்தி தங்களின் எஜமானர்களான இஸ்ரேல் அமெரிக்காவுக்கு மீண்டும் ஒரு முறை விசுவாசத்தை நிருபித்தார்கள். எங்களின் பாஸ்போர்டுகளை பறிமுதல் செய்து விட்டு தரமறுத்துவிட்டார்கள். மிகவும் மோசமான பேருந்துகளில் ஏற்றி ஏராளமான பணத்தைப் பறித்தார்கள். அதன் பின் மிகவும் மோசமான பேருந்துகளில் ஏற்றி கெய்ரோ நோக்கி அழைத்துச் சென்றார்கள். போகும் வழியில் பெரும் விபத்தைச் சந்தித்துப் பலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு அவசர சிகிச்சைக்கு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டார்கள். எனக்கு முழங்காலில் ஒரு சிறிய காயம் மட்டுமே ஏறப்பட்டதால் தப்பித்தேன். இருப்பினும் நடுங்கும் குளிரில் நாங்கள் இரவை வெட்ட வெளியில் கழித்தோம். எகிப்து நிர்வாகம் மிகவும் அலட்சியத்துடன் இந்த விபத்து குறித்து கவலைப்படவேயில்லை. அதன் பின் நாங்கள் அந்தச் சாலையை மறித்து போக்குவரத்தை ஸ்தம்பிக்க செய்தப்பின் தான் ஒரு வழியாக காரியங்கள் நகர்வு பெற்றன. கெய்ரோ விமானநிலையத்திலும் எங்களை அறைகளில் அடைத்து வைத்து எங்கள் விமான நேரத்தில் தான் வெளியே விட்டார்கள். இது தான் காசா செல்பவர்களை எகிப்து அரசு நடத்தும் முறை என வந்தபின் தான் அறிந்து கொண்டேன். இருப்பினும் இந்த இடர்கள் எல்லாம் தான் பயணத்தை இன்னும் அர்த்தம் பொதிந்ததாக மாற்றியது.

கேள்வி : மாவிமாவர்மா துருக்கியில் இருந்தபோது எப்படி இருந்தது மனநிலை? என்னவெல்லாம் பார்த்தீர்கள்?

பதில் : துருக்கியின் வான், தியார்பகீர், காசியான் டெப் ஆகிய ஊர்களின் வழியே நாங்கள் சிரியா நோக்கி பயணித்தோம். துருக்கியில் எங்களுக்கு முழுக்க வழிக்காட்டுதலும் உபசரிப்பும் செய்தது ப்ரீடம் ஃபளோட்டில்லா வை ஏற்பாடு செய்த ஐ.ஹெச்.ஹெச் (IHH – Insani Yardim Vakfi) அமைப்பு. முழுக்க கூடைப்பந்து மைதானங்களின்தான் இரவு தங்கல். துருக்கியின் மிக அழகான நிலப்பரப்பு, பனி மழைகள், உணவு உபசரிப்பு என எல்லாவற்றையும் ரசிக்க முடியாத நெருக்கடியான ஒரு மனநிலை தொடர்ந்து வந்தது. மாவிமாவர்மா கப்பலில் கொல்லப்பட்ட Cengiz Akyüz (42), Ali Haydar Bengi (39), Ibrahim Bilgen (61), Furkan Dogan (19), Cevdet Kılıçlar (38), Cengiz Songür (47), Çetin Topuoglu (53), Fahri Yaldız (43), and Necdet Yldrm (32) ஆகியோர் பற்றிய நினைவுகள் சதா அலைக்களித்தது, அதில் நாங்கள் இப்ராகிம் பிகென் அவர்களின் குடும்பத்தாரையும் அடக்கம் செய்யப்பட்ட மயானக்கரைக்கும் சென்றது பெரும் நெகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. நான் ஏற்கனவே இஸ்ரேலின் இந்தக் காட்டுமிராண்டிதனமான தாக்குதலைப் பற்றி கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். ஐ.ஹெச்.ஹெச் வெளியிட்ட விரிவான அறிக்கைகள் வாசித்திருக்கிறேன். இந்தப் பயணத்தில் ஒரு நாள் மாலை ஐ.ஹெச்.ஹெச் அலுவலகத்திற்குச் சென்று அவர்கள் வசம் இருந்த விரிவான குறுந்தகடுகள், பிரசுரங்களையும் பெற்று வந்தேன். இந்தப் பயணத்தில் ஐ.ஹெச்.ஹெச்-ன் ஊழியர்கள், செயல்பாட்டளர்கள் மிக பெரும் ஆதர்ஷமாக அமைந்தார்கள். அவர்களின் சுறுசுறுப்பு, தெளிவு, வேலை செய்யும் முறை, நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்யும் நேர்த்தி என எல்லாம் ஒரு உத்வேகத்தை அளித்தது.

கேள்வி : உங்கள் புகைப்படங்களில் சில நேரங்களில் அங்குள்ள பெண்களும் போராடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. பாலஸ்தீனப் போராட்டத்தில் அவர்களின் பங்கேற்பு எப்படி இருக்கிறது? ஈரான் சமூகம் பெண்களை மிகவும் வன்மமாக ஒடுக்குகிறார்கள் எனும் ஒரு புரிதல் இருக்கிறதே?

பதில் : மொத்த பயணமும் இஸ்லாமிய பெண்கள் குறித்தான பார்வையை மாற்றியது. பொதுவாக இந்திய ஊடகங்களில் ஈரான் குறித்த இறுக்கமான, பழமைவாத பார்வைகள் நிறையவே நம்மிடம் புழங்குகின்றன. மின்னஞ்சல்களில் வரும் செய்திகள் என ஈரான் மட்டும் அல்லாது இஸ்லாம் குறித்து, இஸ்லாமிய நாடுகள் குறித்த எத்தனை அவதூறுகளை இங்கு ஹிந்துதுவாகாரர்கள் திட்டமிட்டு பரப்பி வருகிறார்கள் என்பது பட்டவர்தனமாக புரிந்தது. ஈரானில் பெண்களுடன் பேசுவது குற்றம், பழகுவது குற்றம் என்கிற அளவில்தான் எங்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன. ஆனால் நாங்கள் அங்குச் சென்ற போது காட்சி முற்றிலும் வேறானதாக இருந்தது. பெண்கள் தான் ஆயிரக்கணக்கில் தெருக்களில் திரண்டு எங்களை வரவேற்றனர். அங்குக் கோஷங்கள் எழுப்பியது பெண்கள்தான். பாலஸ்தீனத்திற்கான பெண்களின் பிரத்யேக ஒவிய கண்காட்சி என எல்லாம் பிரமிக்க வைத்தது. எங்களுடன் 10க்கு மேற்பட்ட பெண் மொழிபெயர்பாளர்கள் ஈரானில் நாங்கள் இருந்த காலம் முழுவதும் உடன் இருந்தனர். நாம் ஈரானிய சினிமாக்களில் காண்பது போலவே அவர்கள் மிக சுதந்திரமானவர்களாக இருந்தனர். ஈரானின் மிக பெரிய மசுதிகளில் கூட அதனை பராமரிப்பவர்களா பெண்கள்தான் இருந்தனர். தெஹ்ராணிள் உள்ள அவர்களது அரசாங்க தொலைக்காட்சி நிறுவனத்திற்கு ஒரு நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நான் சென்ற போது அங்கும் பெரும் ஆச்சரியமே காத்திருந்தது. நான் பங்குபெறும் நிகழ்ச்சிக்கு இன்னும் கொஞ்சம் நேரம் இருந்ததால், நான் அங்கு இருக்கும் பல மாடிகளில் உள்ள படப்பிடிப்பு தளங்களுக்கு சென்றேன். அத்தனை மாடிகளிலும் தொழிநுட்ப கலைஞர்கள், ஒளிப்பதிவு செய்வபர்கள், செய்தி வாசிப்பாளர்கள், உதவி செய்பவர்கள் என அந்த தளம் முழுவதும் பெண்கள்தான். இப்படி ஒரு படப்பிடிப்பு தளம் என்பது நாம் இந்தியாவில் கூட யோசித்து பார்க்க இயலாது.

ஈரானின் பல பெண் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் எங்களை சந்தித்து அங்குள்ள பெண்களின் நிலை குறித்து எடுத்துரைத்தார்கள். அவர்கள் காலத்தின் புரட்சி, போர்கள் என எங்களுடன் மிக லாவகமாக உறையாடினார்கள். ஒரு நாட்டை கட்டமைப்பதில் பெண்களின் பாத்திரம் பற்றி அவர்கள் அரசியல் கூர்மையுடன் கூறிய விஷயங்கள் இன்னொரு சந்தர்ப்பத்தில் எழுதத்தான் வேண்டும்.


Advertisements
பின்னூட்டங்கள்
  1. Hasan Kuthous சொல்கிறார்:

    islamiya ulagathin avala nelaiyai ….
    poradavendum …

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s