இமாம் ஹஸனுல் பன்னா மாணவனுக்கு எழுதிய கடிதம்

Posted: ஒக்ரோபர் 7, 2011 in ISLAMIC MORAL

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
 1935-ஆம் ஆண்டு காலப்பகுதியில் மேற்கு நாடொன்றுக்கு கல்வி தேடி தனது மனைவியுடன் சென்ற ஓர் இஸ்லாமிய மாணவனுக்கு இமாம் ஹஸனுல் பன்னா (ரஹ்) அவர்கள் பயனுள்ள உபதேசங்களைக் கொண்ட ஒரு கடிதமொன்றை எழுதினார்கள். இந்தக் கடிதம் இன்றைக்கும் நம் போன்றவர்களுக்கும் பொருந்துமே என்ற நிதர்சன உண்மையின் கீழ் இக்கடிதத்தை பிரசுரிக்கிறோம்.
                         நல்ல எண்ணத்துடனும் உயர்ந்த நோக்கத்துடனும் பிரயாணத்தை மேற்கொள்கின்ற உங்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.
            கண்ணியத்திற்குரிய மாணவனே! இன்னும் சற்று நேரத்தில், உக்களுக்கு அறிமுகமில்லாத சமூதத்துக்கு மத்தியிலும், உங்களுக்கு பழக்கமில்லாத மத்தியிலும் இருப்பீர்கள். அவர்கள் உங்களிடத்தில் ஒரு முஸ்லிமுக்குரிய உதாரணத்தைப் பார்ப்பார்கள்.எனவே, நீங்கள் மிகச் சிறந்ததோர் உதாரணமாகத் திகழ்வதற்கு முயற்சி செய்யுங்கள்.
            உங்களிடத்தில் பெருமதிமிக்க அடைக்கலப் பொருளொன்று இருக்கிறது. அதுதான் உங்களது மனைவி. அவளை நல்ல முறையில் கவனித்துக் கொள்ளுங்கள். அவளுக்குப் பாதுகாப்பான தோழனாக இருங்கள். அப்போது அவள் உங்களுக்கு மன அமைதியையும் சந்தோசத்தையும் பெற்றுத் தருவாள்.
            நான் உங்கள் மீது கொண்ட  அன்பின் காரணமாகவும், உங்களுக்கு சந்தோஷமானதொரு வாழ்க்கை அமைய வேண்டுமென எதிர்பார்க்கும் ஒரு தூய்மையான நண்பன் என்ற வகையிலும் இன்னும் சில உபதேசங்களை எழுதுகிறேன். அவற்றையும் வாசியுங்கள்.
            உங்களது எல்லா விவகாரங்களையும் செயல்பாடுகளையும் அல்லாஹ் கண்கானித்துக் கொண்டிருக்கின்றான் என்ற நல்லுணர்வோடு அமைத்துக் கொள்ளுங்கள். அல்லாஹ் உங்களது எல்லா செயல்பாடுகளையும் அறிந்தவனாகவும், கண்களுக்குப் புலப்படாத உள்ளங்கள் மறைத்து வைத்திருக்கக் கூடிய அனைத்தையும் தெரிந்தவனாகவும் இருக்கின்றான். எனவே, அவன் உங்களை எந்தவொரு நிலையிலும் பொருந்திக் கொள்ளக் கூடிய வகையில் காண்பதற்கு முயற்சி செய்யுங்கள். அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்ற உணர்வால் நிரம்பிய உள்ளத்தை ஷைத்தான் நெருங்கவும் மாட்டான். எனவே, இவ்விஷயத்தில் பொடுபோக்காக இருக்க வேண்டாம்.
            உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள கடமைகளை நேரத்துக்கு நிறைவேற்றி விடுங்கள்.அவற்றைப் பிறகு செய்யலாம் என்றோ, அல்லது காரணங்களை முன்வைத்தோ அதிக வேலைகளினாலோ பிற்படுத்தாதீர்கள். விட்டு விடதீர்கள். ஏனென்றால் அது இச்சையின் உணர்வுகள். அல்லாஹ் கூறுகின்றான்;
            “மனோ இச்சையைப் பின்பற்ற வேண்டாம். அவ்வாறாயின் அது உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டும் வழி தவறச் செய்து விடும்.” (ஸாத் : 26)
            அல்லாஹ்வை நெருங்கிச் செல்வதற்குரிய மிகச் சிறந்த சாதனமாக அவன் விதியாக்கிய கடமைகளே காணப்படுகின்றன.அதில் குறைவு செய்திட வேண்டாம். நீங்கள் மேற்கத்தேய நாட்டில் இருந்து கொண்டு கஷ்டத்துடன் ஒரு நன்மையைச் செய்வது பன்மடங்கு கூலியைப் பெற்றுத் தரும். நான் இதனைவிட அதிகமாக கடமையான விஷயங்களைப் பற்றிக் கூற விரும்பவில்லை. ஏனென்றால் அதுதான் மூலதனமாகும். மூலதனத்தினை வீணடித்தவனின் கைசேதமான நிலை, நாளை எப்படி இருக்கும் என்பதை நீங்கள் நன்கறிவீர்கள்.
            உங்களுக்கு முடியுமான அளவு நேரத்தை சுன்னத்தான காரியங்களை நிறைவேற்றுவதில் கழியுங்கள். ஃபர்ழான தொழுகைக்குரிய சுன்னத்தான தொழுகைகளையும் நிறைவேற்றுங்கள். இஸ்திஃபார் செய்வதை அதிகப்படுத்தி, மகத்தான உங்களது இறைவனையும் துதி செய்யுங்கள். ஒருவன் பிரயாணத்தில் இருக்கும் பொழுது கேட்கும் துஆ பதிலளிக்கப்படக் கூடியது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
            அல்லாஹ்வை அதிகம் நினைவுக் கூறுங்கள். ஏனென்றால் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், “உமது நாவு அல்லாஹ்வின் நினைவால் நனைந்து கொண்டே இருக்கட்டும்” என அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு உபதேசம் செய்தார்கள்.
            அல்குர்ஆனை விளங்கி ஆராய்ச்சி சிந்தனையுடன் அதிகமாக ஓதி வாருங்கள். அதுதான் உங்களுக்கான நோய் நிவாரணியாகும். உங்களுடைய ஒவ்வொரு நாளையும் அல்குர்ஆனைக் கொண்டே முடியுங்கள். ஏனென்றால், அது சிறந்த ஆரம்பமாகவும் நல்ல முடிவாகவும் உள்ளது.
            நீங்கள் அங்கே பலவீனமான உள்ளங்களை மிகைத்து, கண்களை மயக்கி, சிந்தனையை மழுங்கடித்து, உள்ளத்தைத் திசை திருப்பக் கூடிய உலகத்தின் கவர்ச்சிகளையும், மாயைகளையும் காண்பீர்கள்.இவையெல்லாம் உங்களையும் மயக்கி மறுமையையும் மறக்கடிக்காமல் இருக்கட்டும். அல்லாஹ் கூறுகின்றான்:
            “(நபியே!) இன்னும், அவர்களில் சில பிரிவினர் இன்பமனுபவிக்க நாம் கொடுத்திருக்கும் (வாழ்க்கை வசதிகளின்) பக்கம் உமது கண்களை நீட்டாதீர்; (இவையெல்லாம்) அவர்களைச் சோதிப்பதற்காகவே நாம் கொடுத்துள்ள உலக வாழ்க்கையின் அலங்காரங்களாகும். உமது இறைவன் (மறுமையில் உமக்கு) வழங்கவிருப்பது சிறந்ததும் நிலையானதும் ஆகும். (தாஹா : 131)
            எனது மதிப்பிற்குரியவரே! அங்கு இருக்கிறவர்கள் அல்லாஹ் எங்களுக்கு ஹராமாக்கியுள்ளதை ஹலாலாகக் கருதுவர்கள். அந்த ஹராமான அம்சங்களைச் செய்வதில் சற்றேனும் தயக்கம் காட்ட மாட்டார்கள். எனவே, நீங்கள் இச்சைகளுக்கு உடன்பட்டுச் செல்ல வேண்டாம். அவர்கள் செய்யும் பாவங்களில் பங்கு கொள்ளவும் வேண்டாம். நிச்சயமாக அவை உங்களை அல்லாஹ்வின் பிடியிலிருந்து பாதுகாக்க மாட்டாது. மறுமையில் உங்களுக்கு ஆதரவாகவும் இருக்காது.
            அடுத்து, நீங்கள் அங்குள்ள பெண்களுடன் தோழமை கொள்ள வேண்டாம். உங்களுக்கும் அவர்களுக்குமிடையில் தனிப்பட்ட நட்பையோ, அல்லது உளரீதியிலான உறவையோ ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். இது ஏனையோருக்கு ஒரு குற்றமாக தென்பட்டால், உங்கள் மீது இரண்டு குற்றங்கள் ஏற்படும். ஏனென்றால், அதற்கான விளக்கத்தை அறிந்து வைத்துள்ளீர்கள்.
            மதுபானத்தை நெருங்கவும் வேண்டாம். அவ்வாறு நெருங்குவதற்கு சூழலைக் காரணம் காட்டவும் வேண்டாம். ஏனெனில் அல்லாஹ் அனைத்து சூழல் காரணிகளையும் அறிந்தே அதனை ஹராமாக்கினான். இவ்வாறே ஹராமான எந்த உணவையும் சுவைக்க வேண்டாம். ஹராமான உணவினால் வளரும் உடம்பு நரகத்திற்கே மிகவும் பொருத்தமாகும். அல்லாஹ் ஹராமாக்கிய ஒன்றில் கெடுதியைத் தவிர வேறொன்றுமிருக்காது.
            “இன்னும் தூய்மையானவற்றை அவர்களுக்கு அவர் (நபியவர்கள்) ஹலாலாக்கி, கெட்டவற்றை அவர்கள் மீது ஹராமாக்கி வைப்பார்.”      (அல்அஃராப் : 157)
            இவ்வாறு இன்னும் பல விஷயங்கள் இருக்கின்றன.தொடர்ந்து உங்களுடன் உரையாடிக் கொண்டிருக்க வேண்டுமென விரும்புகிறேன். என்றாலும் அதிகமான பேச்சு சிலவற்றை மறக்கடித்து விடும் என அஞ்சுகிறேன். எனவே, அல்லாஹ் உங்களுக்கு நல்லதை நாட வேண்டும் என பிரார்த்திக்கிறேன். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.

இக்ரா.நெட்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s