பெண் உரிமைக்காக மட்டும் செயற்படுபவர்களாக முஸ்லிம் பெண்கள் இருக்கக் கூடாது

Posted: திசெம்பர் 13, 2011 in POPULAR FRONT

IngridMattson

இங்ரித் மெட்சன் – வட அமெரிக்க இஸ்லாமிய சபையின் தலைவி

இங்ரித் மெட்சன் – வட அமெரிக்க இஸ்லாமிய சபையின் தலைவி. கனடாவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தற்போது ஐக்கிய அமெரிக்காவில் வாழ்கின்றார். உள – உடல் மருத்துவத்தில் (Mind – Body Medicine) ஈடுபாடு கொண்டுள்ள இவர், பெண்களின் சுகாதார விவகாரங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றார். தொழில் ரீதியில் குழந்தை உளவியலாளரான மெட்சன், ரோமன் கத்தோலிக்கத்திலிருந்து இஸ்லாத்தைத் தழுவியவர். இஸ்லாத்தை அச்சொட்டாகப் பின்பற்றுவதில் மிகவும் பற்றுள்ளவர். அவருடனான நேர்காணலை வைகறை வாசகர்களோடு பகிர்ந்து கொள்கிறோம்.

* நீங்கள் வட அமெரிக்க இஸ்லாமிய சபையின் தலைமைப் பதவியை ஏற்றுள்ளீர்கள். இது சமய,ஆன்மீக தலைமையின் மீது தாக்கம் செலுத்துமா?

இச்சபையில் பெண்கள் பல ஆண்டுகளாக செயற்திறனுடன் ஈடுபாடு கொண்டவர்கள். முஸ்லிம் மாணவ அமைப்பை (MSA) 40 ஆண்டுகளுக்கு முன்நிறுவியவர்களும் அமெரிக்கப் பெண்களே. இந்தத் தலைமைத்துவத்தை பலரும் சமய தலைமையாகவே நோக்குகின்றனர். அதனால்தான் இவ்வமைப்புக்கு ஒரு பெண்ணைத் தலைவராக தெரிவு செய்துள்ளனர்.

* பல பெண்கள் இந்த அமைப்புக்கான தேர்தலை முஸ்லிம் பெண்ணிலைவாதத்திற்கு கிடைத்த வெற்றியாகப் பார்க்கின்றனர். உங்களைப் பொறுத்தவரையில் ‘முஸ்லிம் பெண்ணிலை வாதம்’என்பதை எப்படி நோக்குகின்றீர்கள்?

பெண்களுக்கும் உரிமைகள் உள்ளன. அவ்வுரிமைகளை அடையும் அர்த்தமுள்ள வழிகள் இருக்க வேண்டும். அந்த உரிமைகள் உத்தரவாதம் செய்யப்பட வேண்டும் என்பது போன்ற கருத்தே பெண்ணியம். அது நல்லதோர் எண்ணக்கருவே. ஆனால், அதற்கு ஓர் உலகளாவிய நோக்கு அவசியம். பெண்களின் நலன்களை மட்டும் இலக்காகக் கொள்ளும் குறுகிய வட்டத்திலிருந்து எனது நிகழ்ச்சி நிரல் மாறுபட்டது.

நான் எமது சமூகத்தின் ஒட்டு மொத்த நலன்கள்மீதும் கவனம் செலுத்த விரும்புகின்றேன். அநீதி இழைக்கப்படும் அனைவர் குறித்தும் கவனம் செலுத்த வேண்டிய ஓர் உலகில் நாம் வாழ்கின்றோம். முஸ்லிம் பெண்கள், பெண்களின் உரிமைகளில் மட்டும் செயற்படுபவர்களாக இருக்கக் கூடாது.

* பெண்களுக்கு உரிமைகள் இல்லை என்பது இஸ்லாத்திற்கு எதிரான மிகவும் பிரபல்யமான குற்றச்சாட்டாகும். இது குறித்து…?

பெண்கள் ஒடுக்கப்படுகின்றனர் என்ற இந்தக் குற்றச்சாட்டுக்கு, விமர்சனத்திற்கு இரு அடிப்படைக் காரணங்கள் உள்ளன. முதலாவது, பெண்களுக்கு ஷரீஆவிலுள்ள இடம் குறித்து மிகப்பிழையான அறிவையே இத்தகைய விமர்சகர்கள் கொண்டுள்ளனர். இரண்டாவது, முஸ்லிம் உலகில் சில நாடுகளின் உள்ளுர் சமூகங்களிலே நடைபெறும் சில விடயங்களை ஊதிப் பெருப்பிப்பதாகும்.

சில நாட்டு அரசாங்கங்கள் பெண்களை ஒடுக்குவதற்கான நியாயமாக ஷரீஆவை முன்னிறுத்துகின்றனர் என்பது உண்மையே. ஆனால், அவற்றையும் அறுதிப் பெரும்பான்மை முஸ்லிம் நாடுகளில் முஸ்லிம் பெண்கள் அனுபவிக்கும் உரிமைகளையும் சமநிலையோடு நோக்கவேண்டும். நடுநிலையான பார்வை இங்கு அவசியம். ஏனெனில் பெரும்பாலான முஸ்லிம் நாடுகளில் பெண்கள் போதியளவு சமூக வாழ்வில் பங்கேற்கின்றனர். சமீப காலமாக ஒரே நேரத்தில் மூன்று நாடுகளில் முஸ்லிம் பெண்களே அரசியல் தலைமையை ஏற்றிருந்தனர். நான் பயணித்த அநேக முஸ்லிம் நாடுகளில் பெண்கள் உயர்ந்த அந்தஸ்தில் உள்ளனர்.

ISNA (Islamic Society of North America) வின் இலக்குகள் என்ன? எதை நோக்கி அதனைக் கொண்டு செல்ல விரும்புகிறீர்கள்?

எனது முதன்மையான அக்கறை, நிறுவனத்தை நன்கு கட்டமைப்பதும், எமது சமூகத்தின் தேவைகளுக்கேற்ப அதன் தரத்தை மேம்படுத்துவதுமே. இஸ்லாத்தில் இடைத்தரகர்கள் இல்லை. திருச்சபை போன்ற அதிகாரப் படிநிலைகள் இல்லை. எமக்கு இப்படியானவை அவசியமுமல்ல. சமூகத்திலுள்ள சமயத் தலைவர்களின் (உலமாக்களின்) தரத்தையும் உள்ளடக்கத்தையும் மேம்படுத்த சமூகத்திற்கு உதவ முடியும். தொழில்வாண்மையின் (Professionalism) மட்டத்தை உயர்த்த முடியும். கூட்டு முயற்சியினால் வளங்களை யும், ஆற்றலையும் மென்மேலும் கட்டியெழுப்பலாம்.

துரதிஷ்டவசமாக எமது சமூகங்கள் உண்மையான உயிர்த்துடிப்புடன் இயங்கவில்லை. எனவே,பயிற்றுவிப்பும், பயிற்சித் திட்டங்களும் மிகவும் அவசியமானவை. எமது சமூகத்தில் நிறுவனங்களை வழிநடத்துகின்றவர்களுக்கு கல்வி வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். நிறுவன முகாமை, அமைப்பாக்கம் (Organizing) திட்டமிடல் மற்றும் தூரநோக்குடன் செயற்படும் பண்பாட்டை எமது சமூகத்தில் நன்கு வளர்க்க வேண்டும். சமூகரீதியில் நாம் இன்று முன்னிலைப்படுத்த வேண்டிய அம்சங்கள் இதுதான் என நான் எண்ணுகின்றேன்.

* நீங்கள் கூறும் இக்கருத்து சில இமாம்கள், ஷெக்மார்கள் கருத்திலிருந்து வேறுபடுவதாக தோன்றுகிறதே…?

நான் இங்கு பேசுவதெல்லாம் எமது உலமாக்களின் ஆற்றலையும், இயலுமையையும் பற்றியே. உதாரணமாக, எமது ஆலிம்கள் உள்ளூர் நெருக்கடிகளை, பிரச்சினைகளை தீர்த்துவைக்கும் மத்தியஸ்தர்களாக அழைக்கப்படுகின்றனர். இந்த மாதிரிப் பிரச்சினைகளைத் தீர்த்துவைக்கின்ற அல்லது அது குறித்து ஆலோசனை வழங்கும் தகுதியும் அறிவும் இவர்களிடம் உள்ளதா என்பதே எனது கேள்வியாகும். பொதுமக்கள் மத்தியில் எவ்வாறு உரையாற்றுவது என்பது குறித்தும் ஒரு பார்வை வேண்டும். வயதானோர் கல்வியிலும் எமக்கு கவனம் வேண்டும். நான் சொல்வது பிக்ஹ் சார்ந்த பிரச்சினை அல்ல. நடைமுறை சார்ந்த விவகாரங்களும், நுட்பம்சார்ந்த விவகாரங்களுமேயாகும்.

* பயங்காரவாதத்திற்கு எதிராகப் போராடுதல் மற்றும் முஸ்லிம்கள் மீதான ஒடுக்குமுறையை எதிர்த்தல் ஆகியவற்றை வெற்றிகரமாக நிறைவேற்றும் வழிகளை அமெரிக்க முஸ்லிம்கள் கண்டடைந்து விட்டனரா?

நாம் மிகவும் இக்கட்டான ஒரு காலகட்டத்தில் இருக்கின்றோம் என நான் நினைக்கின்றேன். துரதிஷ்டவசமாக மென்மேலும் தமது நலன்களை எட்ட தற்போதைய முரண்பாடுகளை சில சக்திகள் வாப்பாகப் பயன்படுத்துகின்றனர். அது பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு சாதகமாக இல்லை. மாறாக முரண்பாடுகளையும் மோதல்களையும் தீவிரமாக்கி சில குழுக்களின் அரசியல் நலன்களை அடையவே கையாளப்படுகின்றது. இந்தக் குழுக்களில் சில இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் எதிர்க்கின்றன. வேண்டுமென்றே இஸ்லாத்தை தீவிரவாதத்துடன் இணைக்கின்றன.

இவர்கள் இஸ்லாமிய பாஸிசம் என்பது போன்ற பதங்களைக் கையாளத் தூண்டுதலளிக்கின்றனர். இது நிலமையை மென்மேலும் சிக்கலாக்குகின்றது. எனவே, இது தொடர்பில் இன்னும் பல வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளன.

* அமெரிக்க முஸ்லிம் சமூகத்தின் அடுத்த கடமை என்ன?

நாம் முஸ்லிம்களாக வாழும் சரியான வழியைக் கண்டடைய வேண்டும். அது அடுத்தவர்களுக்கு உதாரணமாக அமையவேண்டும். மனித உரிமை விவகாரம் தொடர்பில், பெரும் சர்வதேச மனித உரிமை நிறுவனங்களுடன் இணைந்து செயற்பட வேண்டும். எமது நாட்டு அரசாங்கம் மனித உரிமை மீறலில் ஈடுபடும்போது நாம் மிகவும் உன்னிப்பாக செயற்பட வேண்டும். நாம் அமெரிக்காவின் பிரஜைகள் என்ற வகையில் அதன் சட்டங்களை மதிக்க வேண்டும். அதேவேளை எமது அரசாங்கம் அதன் பெறுமானங்களையும் சர்வதேச சட்டங்களையும் மீறுகின்றதா என்பது குறித்த விழிப்புணர்வும் எமக்கு அவசியம்.

எமக்கு வெளியேயும் நீதிக்காவும் உரிமைக்காகவும் போராடும் மக்கள் உள்ளனர் என நாம் நம்புகிறோம். அவர்களோடு நாம் சில விடயங்களில் ஒத்துழைத்து செயலாற்றலாம்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s