சிரியா: உலக அதிகாரச் சமநிலையில் மாற்றம்

Posted: மார்ச் 3, 2012 in MUSLIM WORLD

syria arab_league

சிரியா மத்திய தரைக்கடலில் லெபனான்,துருக்கி, ஈராக், ஜோர்தான்,இஸ்ரேல் ஆகியவற்றை எல்லைகளாகக் கொண்ட நாடு. உத்தியோகபூர்வ கணிப்பின்படி 74% சுன்னி முஸ்லிம்களும் 12% அலவி ஷீஆக்களும், 9%கிறிஸ்தவர்களும் வாழ்கின்றனர்.

1946 இல் சுதந்திரம் அடைந்ததிலிருந்து பல இராணுவப் புரட்சிகளை சந்தித்து வந்த சிரியாவில், 1971 ஆம் ஆண்டிலிருந்து2000 ஆம் ஆண்டு வரை ஹாபிஸ் அல் அஸத் என்பவர் ஜனாதிபதியாக இருந்தார். தற்போது அவரது மகன் பஷர் அல் அஸத் பதவி விலக வேண்டும் எனக் கோரி மில்லியன் கணக்கான மக்கள் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

2 ஆம் உலகப் போருக்குப் பின்னர் அறபுத் தேசியவாதத்தின் விளைநிலமாகவே சிரியா இருந்து வந்தது. பலஸ்தீன் தொடர்பான அதன் நிலைப்பாடும் ஒப்பீட்டு ரீதியிலான பலமான இராணுவக் கட்டமைப்பும் சிரியாவின் அரசியல் முக்கியத்துவத்திற்கு ஆதாரமாக இருந்தன. சிரியா ஹமாஸை ஆதரித்து வந்தமையும் அறபு இஸ்ரேல் யுத்தங்களில் பங்குகொண்டமையும் இதன் வெளிப்பாடுகளே.

சிரிய இராணுவத்தில் 6,46,000 படை வீரர்கள் உள்ளனர். 700 கி.மீ. தூரம் சென்று தாக்கும்SCUD-C, SCUD-D ரக ஏவுகணைகளை ஈரான், வட கொரியா என்பவற்றின் உதவியுடன் தயாரித்துள்ளது. – MIG-29, MIC-31 போர் விமானங்களும் உள்ளன.

இப்பின்புலத்தில் நோக்கும்போது சிரியா அரசியல் முக்கியத்துவமுள்ள நாடு என்பதில் சந்தேகமில்லை. ஆயினும், பாத் கட்சி அதிகாரத்திற்கு வந்ததிலிருந்து இஸ்லாமிய எழுச்சி திட்டமிட்டு நசுக்கப்பட்டு வந்தது.

சிரியாவின் இஸ்லாமிய இயக்க வரலாறு மிகவும் சோகம் நிறைந்தது. 1980 களில் இஹ்வான்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறைகளும் படுகொலைகளும் மிகவும் குரூரமானவை. அதில் 30,000 க்கும் அதிகமான இஹ்வான்கள் கொல்லப்பட்டனர். ஹுமாவில் இவை நடந்தன. இஸ்லாத்திற்கு எதிரான தீவிர மதச்சார்பற்ற ஆட்சியே அந்நாட்டில் இன்றுவரை நடைபெற்று வருகின்றது.

இப்போது தூனிஸிய, எகிப்திய மக்கள் புரட்சி சிரிய மக்களை வீதிக்கு இறக்கியுள்ளது. எகிப்திய இராணுவம் சிரிய இராணுவத்தை விடப் பலமானது. அதை எகிப்தியர்கள் வெற்றி கொண்டார்கள். இந்த உற்சாகமும் உத்வேகமும் சிரிய மக்களை புரட்சிக்குத் தயார்செய்துள்ளது.

சிரியப் புரட்சி ஒரு பரந்துபட்ட இராணுவ அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம். அமெரிக்காவும் ஐரோப்பாவும் பாரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளபோது, அடுத்த வல்லரசாக மாறிவரும் சீனாவின் சிரியா தொடர்பான நிலைப்பாடு பாரிய விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கின்றது.

syrian-protestersமத்திய கிழக்கில் சந்தைகளைத் தேடும் வாய்ப்பை சீனாவினதும் ரஷ்யாவினதும் நிலைப்பாடுகள் குறைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

சிரியாவில் இஸ்லாமியவாதிகள் ஆட்சிக்கு வரும்போது முழு மத்திய கிழக்கிலும் பாரிய அரசியல் மாற்ற அலைகள் வீசுவதற்கான வாய்ப்புள்ளது. புரட்சியின் பின்னர் சிரியாவின் எதிர்காலம் எப்படி அமையலாம் என்பதை கடந்தகால அரசியல் போராட்ட வரலாற்றிலிருந்தே புரிந்து கொள்ள முடியும்.

1930 இல் ஸ்தாபிக்கப்பட்ட சிரியாவின் சகோதரத்துவ அமைப்பு, 1961 இல் நடைபெற்ற தேர்தலில்10 ஆசனங்களைக் கைப்பற்றியதோடு, பாத் சோசலிஸ அரசுக்கு எதிரான அரசியல் போராட்டத்தில் பெரும் பங்காற்றியது. 1982 படுகொலைக்குப் பின்னர் சிரிய அரசினால் கொண்டு வரப்பட்ட அவசரகால விதி 49 இன் படி சகோதரத்துவ அமைப்பில் பங்கேற்பது கொலைத் தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டது. எவ்வாறாயினும் தடைவிதிக்கப்பட்ட பின்னரும் சகோதரத்துவ அமைப்பினர் மிக நுணுக்கமாக செயல்பட்டு வந்தனர்.

சிரியாவின் சிவில் சமூகத்தில் மிகப் பெரும் செல்வாக்குள்ள சக்தியாக இன்று சகோதரத்துவ அமைப்பினரே உள்ளனர். அறப் லீக் சிரியப் புரட்சிக்கு ஆயுத ரீதியாக உதவப் போவதாக அறிவித்துள்ள, இன்றைய சூழலில், அரசியல் பன்மைத்துவத்தையும் அமைதியான ஜனநாயகப் போக்கையும் கடைப்பிடிக்கும் சகோதரத்துவ அமைப்பினர் எவ்வகையான நிலைப்பாட்டை எடுப்பர் என்பதை அறபு இஸ்லாமிய உலகம் எதிர் பார்த்து நிற்கின்றது. அவ்வியக்கத்தின் ஸ்தாபகர் இமாம் பன்னாவின் ஐந்தாவது மாநாட்டுப் பேருரையை மேலைய பத்திரிகையாளர்கள் படிக்க ஆரம்பித்துள்ளனர். அம்மாநாட்டில் இமாம் பன்னா இவ்வாறு கூறுகின்றார்.

“உங்களது இப்பாதையின் கட்டங்கள் தெளிவாக வரையப்பட்டுள்ளன. அதற்குரிய வரையறைகள் நன்கு வகுக்கப்பட்டுள்ளன. இலக்கை அடைவதற்குரிய மிகச் சரியான பாதை இதுவே என்பதில் எனக்கு முழுமையான திருப்தியுள்ளது. எனவே, இப்பாதை நீண்டதாக அமையலாம். ஆனால்,இலக்கை அடைவதற்கு வேறு பாதைகள் கிடையாது. பொறுமை, தொடர்ச்சியான போராட்டம்,சோர்வற்ற உழைப்பு இவற்றில்தான் ஒரு மனிதனின் முழுமையான ஆளுமை பிரதிபலிக்க முடியும். யார் பழுக்க முன்னர் பழத்தை அவசரப்பட்டு பறிக்க முயல்கின்றாரோ, தகுந்த நேரம் வருவதற்கு முன்பாக அவசரப்படுகின்றாரோ அவரோடு எனக்கு உடன்பாடில்லை.”

எனவே, எத்தகைய நிலைமைகள் ஏற்பட்டாலும் சிரிய இஹ்வான்கள் தமது வழிமுறைகளை மாற்றுவார்கள் என எதிர்பார்ப்பது கடினம். இமாம் பன்னா மேலும் இவ்வாறு கூறுகின்றார்:

“அறிவுப் பார்வைகளால் உணர்ச்சிகளின் எல்லை மீறல்களுக்கு கடிவாளம் இடுங்கள். அறிவின் ஒளிக்கற்றைகளுக்கு உணர்ச்சி நெருப்பால் உஷ்னமூட்டுங்கள். பிரபஞ்ச விதிகளோடு மோத முற்படாதீர்கள். ஏனெனில் அவை பலமானது. வெற்றிகொள்ளக் கூடியது. ஆனால், அவற்றோடு போராடி வளைத்துப் பயன்படுத்திக் கொள்ள முயலுங்கள். அவற்றின் போக்கை திருப்பி விட முயலுங்கள். ஒன்றை வெல்ல இன்னொன்றின் உதவியைப் பெறுங்கள். வெற்றி வரும் நேரத்தை அவதானித்து நில்லுங்கள். அது உங்களை விட்டும் வெகு தூரத்தில் இல்லை.”

இதுதான் இஹ்வான்களின் நிலைப்பாடு. சிரிய இஹ்வான்கள் தமது நிலைப்பாட்டை இவ்வாறு வெளியிட்டுள்ளனர்.

“அஸதின் படுகொலைகள் எம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்த வில்லை. எவ்வளவுதான் கொலைகள் தொடர்ந்தாலும் மக்கள் மௌனமாக இருக்கப் போவதில்லை. நீதியை நிலைநாட்டும் வரை மக்களின் சுதந்திரம் உறுதிப்படுத் தப்படும்வரை கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை புரட்சி தொடரும். இவ்வாறு கூறியுள்ள இஹ்வான்கள், படுமோசமான இக்கொலைகளுக்கு எதிரான ஒரு சர்வதேச சபையை உருவாக்குமாறு ஐ.நா.வையும் அறபு லீக்கையும் வேண்டியுள்ளனர்.

அயலிலுள்ள ஜோர்தான் இஹ்வான்கள் அஸதின் அரசுக்கு எதிராகப் போராடுவது இஸ்லாமியக் கடமை எனக் குறிப்பிட்டுள்ளதோடு, சிரிய அரசுக்குச் சார்பாக இயங்கும் சீனாவினதும் ரஷ்யாவினதும் பொருட்களை பகிஷ்கரிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

சிரியாவில் பாரிய சிவில் யுத்தம் வெடிப்பதற்கான சூழ்நிலை உருவாகிவிட்டது. அஸத் அனைத்து உடன்பாட்டு முயற்சிகளையும் தூக்கி எறிந்து விட்டார். பொறுத்துப் பார்ப்போம் என்ற மனப்பாங்கை கைவிடுமாறு துருக்கி சர்வதேச சமூகத்தைக் கேட்டுள்ளது.

ஈரான், ரஷ்யா, சீனா ஆகிய மூன்று சக்திகளும் ஆளும் அஸத் வர்க்கத்திற்கு முண்டுகொடுக்கின்றன. துருக்கியினதும் அமெரிக்காவினதும் இராணுவத் தளபதிகள் அங்காராவில் சந்தித்துப் பேசியுள்ளனர். அறப்லீக் இராணுவத் தீர்வை நோக்கியே நகர்கின்றது.

இதன் ஒட்டுமொத்த விளைவாக, சிரியாவில் அரசாங்கத்திற்கு எதிரான பாரிய போராட்டம் வெடிப்பதோடு, அதில் இன்றுள்ள அரசாங்கம் முழுத் தோல்விகாணும். அது சிரிய மக்களின் சுதந்திரத்தை உறுதி செய்வதோடு, உலக இராணுவ அரசியல் சமநிலையையும் மாற்றிவிடும்.

புரட்சிக்குப் பிந்திய அரசியல் மாற்றம் எவ்வாறு நிகழ வேண்டும் என்பதையும் ரஸாஇலில் இமாம் பன்னா பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

“அரசு சீர்திருத்தப்பட வேண்டும். இஸ்லாமிய உம்மத்திற்கும் ஏனைய சமூகங்களுக்கும் இடையிலான வெளித் தொடர்பு ஒழுங்குபடுத்தப்பட வேண்டும். கண்ணியமும் சமூக உணர்வும் கொண்டவர்களாக முஸ்லிம் சமூகம் பயிற்றுவிக்கப்பட வேண்டும்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s