ஜூன், 2012 க்கான தொகுப்பு


பெரியப்பட்டிணம்:இராமநாதபுரம் மாவட்டம் பெரியப்பட்டிணத்தில் சுய ஒழுக்க பயிற்சி முகாமில் கலந்து கொண்ட பாப்புலர் ஃப்ரண்ட் உறுப்பினர்களை தீவிரவாத கும்பலை பிடிப்பது போல அதிரடியாக கைது செய்து பரபரப்பை ஏற்படுத்திய காவல்துறையின் சூழ்ச்சியை பாப்புலர் ஃப்ரண்ட் உறுப்பினர்கள் முறியடித்தனர். மேலும் கைது செய்யப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.இதுகுறித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயலாளர் காலித் முஹம்மது பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த அறிக்கையில் கூறியிருப்பதாவது;

“பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தமிழகம், புதுவை, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, கோவா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், மணிப்பூர், இராஜஸ்தான், டெல்லி என இந்திய தேசத்தின் பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டு வரும் ஒரு தேசிய பேரியக்கம். அதன் அடிப்படையில் இங்குள்ள உறுபினர்கள் அண்டை மாநிலங்களுக்குச் சென்று சுய முன்னேற்ற வகுப்புகளில் கலந்து கொள்வதும், அவர்கள் நம் தமிழ்நாட்டிற்கு வருவதும் எதார்த்தமான ஒன்று.
அதனடிப்படையில் இராமநாதபுரம் மாவட்டம் பெரியப்பட்டிணம் கிராமத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சுய முன்னேற்ற மற்றும் நல்லொழுக்க வகுப்புகள் கடந்த 6 நாட்களாக நடந்து வருகின்றது.

இயற்கையான சூழ்நிலை, அமைதியான சூழல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அவர்கள் நம் தமிழகத்திற்கு சுய முன்னேற்றம் மற்றும் நல்லொழுக்க வகுப்பிலே கலந்து கொள்வதற்காக வெளி மாநிலங்களை சேர்ந்த எங்கள் அமைப்பின் உறுப்பினர்கள் 22 பேர் வந்து பங்கெடுத்தனர்.
இதில் தனி மனிதனை பன்படுத்துதல், சுய முன்னேற்றம், நேரம் பேணுதல், செய்தி தொடர்பு பரிமாற்றம், யோகாசனம், மெல்லோட்டம், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உடற்கல்வி, பேரிடர் மீட்பு மற்றும் நிவாரண மேலாண்மை ஆகிய வகுப்புகள் கொடுத்து பண்படுத்தி வருகின்றோம்.

இந்நிலையில் நேற்று (25.06.2012) மதியம் 2 மணி அளவில் வகுப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்திற்கு இராமநாதபுரம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் காளிராஜ் மகேஷ் குமார் உத்தரவின் பேரில் ஒரு உதவி எஸ்.பி, 4 டி.எஸ்.பிகள், 12 இன்ஸ்பெக்டர்கள், 26 சப்-இன்ஸ்பெக்டர்கள், 50-க்கும் மேற்பட்ட அதிரடிப்படையின் 17 காவல் வாகனங்களில் வந்து இறங்கி, அத்துமீறி உள்ளே நுழைந்து வெளிமாநில உறுப்பினர்கள் மற்றும் உள்ளூரைச் சேர்ந்த 8 பேரையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

பெரியபட்டிணம் என்பது முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கக் கூடிய ஒரு கிராமம். இங்குள்ள மக்களை பீதிவயப்படுத்தும் விதமாக முஸ்லிம் இளைஞர்களை கைது செய்து அழைத்துச் சென்றது காவல்துறையின் சிறுபான்மை விரோதப் போக்கையும், பாரபட்சத்தையும் தெளிவாக காட்டுகின்றது. இத்துணை பெரிய காவல் படையுடன் அங்கே வந்து பீதியை கிளப்பியது திட்டமிட்டே காவல்துறையின் சில கறுப்பு ஆடுகள் மக்கள் பேரியக்கமான பாப்புலர் ஃப்ரண்ட்டின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற கெட்ட நோக்கத்துடன் செயல்பட்டுள்ளதை தெள்ளத் தெளிவாக காட்டுகின்றது.

காவல்துறையின் இந்த மோசமான செயலை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டிக்கின்றது.கைது செய்ததற்கு பிறகு எந்த வித முகாந்திரமும இல்லாததால் நேற்று இரவே கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்துள்ளனர்.இவ்வாறு தவறான உள்நோக்கம் கொண்டு சிறுபான்மை சமூகத்திற்கு தேசிய அளவில் என்ன வகையான அநீதி இழைக்கப்படுகின்றதோ அதே போன்ற சூழ்நிலையை தமிழகத்திலும் காவல்துறையின் சில கறுப்பு ஆடுகள் உருவாக்க முயற்சித்து வருகின்றனர்.

இராமநாதபுரம் காவல்துறையின் இந்த செயல் நிச்சயமாக தமிழக காவல்துறைக்கு ஒரு இழுக்கை ஏற்படுத்தும் செயலாகும். தமிழக அரசு உடனடியாக இதில் தலையிட்டு அத்துமீறி சுய முன்னேற்ற வகுப்பிற்குள் நுழைந்து பாப்புலர் ஃப்ரண்ட் உறுப்பினர்களை கைது செய்து, பீதியை கிளப்பி, பாப்புலர் ஃப்ரண்டின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்த காவல்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாப்புலர் ஃப்ரண்ட் தமிழக அரசை கேட்டுக் கொள்கின்றது.” என்றார்.


இன்று ஆண்-பெண், இளையோர்-முதியோர் என ஒவ்வொரு எகிப்தியரும் தம்முன்னே உள்ள நாட்கள் குறித்து அதிக அக்கறை கொண்டுள்ளனர். புரட்சிக்குப் பிந்திய முதலாவது ஜனாதிபதித் தேர்தல் இதில் முக்கியமானது. மாற்றம் நிகழவுள்ள அடுத்த வருடம் குறித்த அக்கறையும் இதில் அடங்கும். இதற்கு நானும் விதிவிலக்கல்ல.
சந்தேக மனப்பான்மை கொண்டோர் அமைதியின்மை, ஸ்திரமின்மை, குழப்பம் பற்றிய அச்சத்தை தூண்டிவிடும் சூழ்நிலையில், எகிப்திய மக்கள் அவ்வாறான சவால்களை எதிர்கொள்வதற்கான ஆற்றல் உடையவர்கள் என நான் கருதுகிறேன். ஜனவரி 2011 இல் வீதிகளிலிருந்து பொலிஸார் மாயமாய் மறைந்தபோது, உள்ளூர் வெகுஜனக் குழுக்களை ஏற்படுத்தி இம்மக்களே தமது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொண்டனர்.
அவர்கள் இப்போது அதிகளவு தியாகம் செய்துள்ளனர். அவர்களை அச்சமூட்டலாம் என நான் நம்பவில்லை. எகிப்தைப் பற்றி தவறான கருத்துக்களைப் பரப்புவது தொடர்பான எனது உள்ளுணர்வை நான் சமீபத்தில் வெளிப்படுத்தியிருந்தேன். புரட்சி நிகழ்ந்த 18 நாட்களின்போது நாங்கள் அனுபவித்த ஒருமித்த தன்மையையும் நல்லிணக்கத்தையும் இப்போது நான் இழந்து நிற்கிறேன்.
ஒரு வருடத்திற்கு முன்னர், நாட்டின் எதிர்காலம் மீது அக்கறை கொண்ட புரட்சியாளர்களுடன் இணைந்து, ‘தஹ்ரீரின் ஆன்மா’ என்ற ஆவணத்தை வரைவதில் நானும் பங்கேற்றேன். நாங்கள் பல்வேறு அரசியல், சமூக மற்றும் புலமைத்துவப் போக்குகளைப் பிரதிநிதித்து வப்படுத்தினோம். அதில் கிப்திய கிறிஸ்தவ செயற்பாட்டாளர்கள் முஸ்லிம்களுடன் ஒன்றாக இணைந்திருந்தனர்.
இதுவே எகிப்தின் எதிர்கால முன்னேற்றத்திற்கும் அபிவிருத்திக்குமான எமது கனவாக இருந்தது. தஹ்ரீர் சதுக்கத்திற்கும் நாட்டிலுள்ள ஏனைய சதுக்கங்களுக்கும், தமது உரிமைகளையும் கண்ணியத்தையும் கோருமாறு மக்களைத் தூண்டிய படைப்பூக்கம், முன்வந்து செயற்படல், தூய்மை, தன்னெழுச்சி என்பவற்றில் அது அழுத்தமான கவனத்தைக் கொண்டிருந்தது.
அவர் யாராக இருப்பினும், எகிப்தியர்களை மீண்டும் ஒரு முறை ஒருமுகப்படுத்துவதே இவ்வாரம் தெரிவுசெய்யப்படவுள்ள (இக்கட்டுரை தேர்தலுக்கு முன்னர் எழுதப்பட்டது) ஜனாதிபதியின் மிகப் பிரதானமான பணி என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். எகிப்தியர்கள் தம்மைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு ஜனாதிபதியையே எதிர்பார்த்திருக்கின்றனர்; முன்னைய ஆட்சியைப் பிரதிநிதித்துவம் செய்பவரை அல்ல.
கடந்த வருடம் இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலே, இதுவரை புரட்சி அடைந்த அதி உன்னதமான அடைவாகும். தமது பிரதிநிதிகளை சுதந்திரமாக தெரிவுசெய்வதற்காக, முன்னெப்போதும் இல்லாத அளவு வாக்காளர்கள் திரண்டதை அதன்போது நாம் கண்டோம்.
இஹ்வானுல் முஸ்லிமூன் அமைப்பும், அதன் அரசியல் பிரிவான சுதந்திரத்திற்கும் நீதிக்குமான கட்சியும் இத்தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளை வென்றெடுத்தன. சட்ட ஆட்சி, அதிகாரத்தை அமைதி வழியில் கைமாற்றுதல் என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட சுதந்திர சமூகத்திற்கான எகிப்தின் ஜனநாயகப் பாதை தொடரும் என்ற உறுதிப்பாடு இப்போது அடையப் பெற்றுள்ளது.
சுதந்திரத்திற்கும் நீதிக்குமான கட்சி தலைமையிலான புதிய பாராளுமன்றம், எகிப்தின் புதிய அரசியல் அமைப்பை வரைவதற்கான அரசியலமைப்புச் சபையை, தேசிய உடன்பாட்டின் மூலம் தெரிவுசெய்யும் பணியை தன்னகத்தே கொண்டுள்ளது. இதில் சமூகத்தின் அனைத்துப் பகுதியினரும் நியாயமான முறையில் பிரதிநிதித்துவம் வகிப்பர்.
எகிப்தியர்கள் தமது புதிய ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்காக வாக்குச் சாவடிகளுக்குச் செல்லும்போது, ஒவ்வொரு வாக்கையும் பெறுமதியாகக் கருதும் வகையில், வாக்களிப்பு முறையிலுள்ள வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்தும் வகையிலான பல சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
உலகளாவிய ஊடகங்களின் கவனம் எகிப்தை நோக்கி மீண்டும் குவியும்போது, அதுவே எனது உலகத்தின் மையமாக தொடர்ந்தும் இருக்கும்.
புரட்சியின் முன்னணியில் இன்னும் நான் செயல் வேகத்துடன் இயங்குகிறேன். மக்களை இணைக்கவும், அவர்களிடையே உரையாடலை ஏற்படுத்தவும், ஒருவர் மற்றவரைப் பற்றி அதிகம் அறிந்து கொள்ளவும், தம்மிடையே பொதுவாகவுள்ள விடயங்களை வெளிப்படுத்தவும் தூண்டுகின்ற உள்ளூர் சமூக செயற்பாட்டிற்கு ஆதரவளிக்கிறேன். இது சகிப்புத் தன்மையையும் பகிர்ந்துகொள்ளலையும் ஊக்குவிக்கிறது. இதனூடாக அனைவரது நன்மைக்கும் இது வழியமைக்கிறது.
இப்போது நான் எனது 40 களின் பிந்திய வயதில் இருக்கிறேன். முன்னோக்கிப் பார்ப்பதற்கும், சாதகமாகச் சிந்திப்பதற்கும் பொறுமைக்கும், எப்போதும் கொடுப்பதற்குமாய், நான் புரட்சியிலிருந்து பல பாடங்களைக் கற்றிருக்கிறேன்.
எகிப்தின் எதிர்காலம் குறித்து நான் ஆவல்கொள்ளும்போது, எனது கனவுகளுடன் பலமாகப் பிணைந்திருப்பேன். புரட்சியின் இலக்குகளான சுதந்திரம், கண்ணியம், சமூக நீதி ஆகியன களத்தின் யதார்த்தமாக மாறுவதைக் கனவு கண்டுகொண்டிருப்பேன்.
பின்னர் சட்டென எனது அலுவலகப் பணிக்குத் திரும்பும்போது, தஹ்ரீரின் ஆன்மாவை என்றென்றும் நிலைத்திருக்கச் செய்வதற்கான வழி இதுதான் என ஆழமாய் நம்புகிறேன்.