‘விஸ்வரூபம்’ சர்ச்சை முடிவுக்கு வந்தது: சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க கமல் ஒப்புதல்!…

Posted: பிப்ரவரி 3, 2013 in NEWS

சென்னை:இஸ்லாத்தின் புனித ஆதாரங்கள் மற்றும் வணக்க வழிபாடுகளை அவமதிக்கும் வகையிலும், அமெரிக்காவின் தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்ற அழித்தொழிப்பு நடவடிக்கைகளையும், ஆக்கிரமிப்பையும் ஆதரிக்கும் வகையிலும் தயாரிக்கப்பட்ட விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பான சர்ச்சை முடிவுக்கு வந்தது. இத்திரைப்படத்தின் 6 காட்சிகளை நீக்கவும், திரைப்படத்தின் துவக்கத்தில் இது முற்றிலும் கற்பனையானது என்று காட்டவும் கமலஹாசன் ஒப்புக்கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து எதிர்ப்பை கைவிட முஸ்லிம் அமைப்புகள் தீர்மானித்துள்ளன.

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்துறைச் செயலாளர் ராஜகோபால் முன்னிலையில் நடைபெற்ற முத்தரப்புப் பேச்சுவார்த்தையில் நடிகர் கமல்ஹாசன் தரப்பும், இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பும் சுமுக முடிவுக்கான எழுத்துப்பூர்வ உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளன.

தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை பிற்பகல் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில் அரசுத் தரப்பில் உள்துறை செயலாளர் ராஜகோபால், விஸ்வரூபம் படத் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் நடிகர் கமலஹாசன், அவருடைய சகோதரர் சந்திரஹாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் முகமது ஹனீபா, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அஹ்மத் பக்ருத்தீன், எஸ்.டி.பி.ஐயின் தெஹ்லான் பாகவி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மூத்தத் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான ஜவாஹிருல்லா உள்ளிட்ட 14 பேர் பங்கேற்றனர்.

பிற்பகலில் தலைமைச் செயலகத்தின் பிரதான கட்டடத்தின் கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தை 6 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. பேச்சுவார்த்தையின் போது, விஸ்வரூபம் படம் திரையிட்டுக் காண்பிக்கப்பட்டதாகவும், அதிலுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை இஸ்லாமிய அமைப்புகள் சுட்டிக் காட்டியதாகவும், அதற்கான விளக்கங்களை கமலஹாசன் அளித்ததாகவும் அரசுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பேச்சுவார்த்தை இரவு 7.30 மணிக்கு முடிவடைந்தது.

தீவிரவாத செயல்களுக்கு முன்பாக திருக்குர்ஆன் வசனங்களை ஓதுதல், தக்பீர் கூறுதல் ஆகிய காட்சிகள், முல்லா உமர் தமிழ்நாட்டில் தலைமறைவாக இருந்ததாக கூறப்படும் காட்சி ஆகியன நீக்கப்படும் காட்சிகளில் அடங்கும்.

பேச்சுவார்த்தை குறித்து எம்.எல்.ஏ ஜவாஹிருல்லாஹ் கூறியது: “விஸ்வரூபம் படத்தின் சில காட்சிகள் மற்றும் சில வசனங்களை நீக்க நடிகர் கமல்ஹாசன் ஒப்புக் கொண்டுள்ளார். இது தொடர்பாக இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் நடிகர் கமல்ஹாசன் இடையே எழுத்துப்பூர்வமான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்த ஒப்பந்தத்தில் இஸ்லாமிய அமைப்புகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முகமது ஹனீபாவும் மற்றும் ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் நடிகர் கமலஹாசனும் கையெழுத்திட்டுள்ளனர்” என்றார்.

பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் அளித்த பேட்டி: “முத்தரப்பு பேச்சுவார்த்தை என்ற இந்தச் சந்திப்பு ஏற்பட ஆவன செய்தமுதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அரசு விடுமுறை நாளிலும் கிட்டத்தட்ட 6 மணி நேரமாக எங்களுக்கு ஆலோசனைகள் மற்றும் ஆறுதல்களைச்சொன்ன உள்துறைச் செயலாளருக்கு நன்றி. பேச்சுவார்த்தையில் என்னுடைய இஸ்லாமிய சகோதரர்களிடம் பேசி அவர்களின் குறைகளைத் தெரிந்து கொண்டு என்னால் என்ன முடியும் என்பதைத் தெரிவித்தேன்.
அவர்களது கோரிக்கையை ஏற்று, படத்தில் சில ஒலிக் குறிப்புகளை நீக்குவதாகச் சொல்லி இருக்கிறேன். அதன் பட்டியல் இருக்கிறது. நீக்கப்படும் குறிப்புகள் குறித்து மத்திய சான்றிதழ் தணிக்கை வாரியத்திடம் முறைப்படி தெரிவித்து அவர்களின் ஒப்புதல் பெறப்படும். இதன் பின், படத்தை வெளியிட முயற்சிப்பேன். இந்த படப் பிரச்னை தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் எனது சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை வாபஸ் பெறுவேன். தமிழக அரசும் படத்துக்கு விதித்துள்ள தடையை விலக்கிக் கொள்ளும் என நம்புகிறேன்” என்றார் நடிகர் கமலஹாசன்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s