குவைத்: அமீரை (ஆட்சியாளர்) அவமதித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்தவருக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத்தில், ஆட்சியாளரை அவமதித்து கருத்து தெரிவிப்பது சட்ட விரோத குற்றமாக கருதப்படுகின்றது.
சமூக வலைத்தளமான ட்விட்டரில் அவ்வாறு கருத்து தெரிவித்த முஹம்மத் ஈத் அல் அஜ்மி என்ற எதிர்கட்சியின் இளைஞர் செயற்பாட்டாளருக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு கீழ் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இத்தண்டனை உடனடியாக செயல்படுத்தப்படும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
பிப்ரவரி 3ஆம் தேதியன்று இத்தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனை எதிரத்து மேல் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்படும் என்று குவைத் மனித உரிமைகள் கழகத்தின் இயக்குனர் முஹம்மத் அல் ஹுமைதி தெரிவித்துள்ளார்.
இது போன்ற குற்றச்சாட்டின் கீழ் ஏற்கனவே தண்டிக்கப்பட்டு சிறைத்தண்டனையை அனுபவித்து வரும் அய்யாத் அல் ஹப்ரி, ரஷீத் அல் எனெஜி ஆகிய இருவர் மேல் நீதிமன்றத்தில்
முறையீடு செய்து தீர்ப்பினை எதிர் நோக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. வரும் வாரங்களில் இதே போன்ற குற்றச்சாட்டில் சிக்கியுள்ள மேலும் பல இளைஞர் செயற்பாட்டாளர்களுக்கு இதே தண்டனை வழங்கப்படலாம் என தெரிகின்றது.