மலாலாவுக்கு மீண்டும் அறுவை சிகிச்சை!

Posted: பிப்ரவரி 5, 2013 in NEWS

லண்டன்: லண்டனில் சிகிச்சை பெற்றுவரும் மலாலாவுக்கு தலையில் மீண்டும் அறுவை சிகிச்சை நடைபெற்றது.
பெண் கல்வியை ஊக்குவித்த பாகிஸ்தான் சிறுமி மலாலாவை தலிபான்கள் கடந்த அக்டோபர் மாதம் துப்பாக்கியால் சுட்டதில், மலாலாவின் தலை உட்பட பல இடங்களில் குண்டுபாய்ந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவ மருத்துமனையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அவருக்கு இலவச உயர்சிகிச்சை அளிக்க பிரிட்டன் அரசு முன்வந்தது.
இதனை அடுத்து லண்டனில் உள்ள ராணி எலிசபத் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த மலாலாவுக்கு இதுவரை 3 அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளன. உடல்நலம் தேறிய மலாலாவுக்கு மேலும் சில அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டி இருந்தது.
இந்த நிலையில், மலாலாவுக்கு மீண்டும் கடந்த சனிக்கிழமை வெற்றிகரமாக அறுவை சிகிச்சைகள் நடத்தப்பட்டதாக ராணி எலிசபத் மருத்துவமனை நிர்வாகம் நேற்று அறிவித்துள்ளது. சேதமடைந்த தலை எலும்புகளை ‘டைட்டானியம் பிளேட்’டால் இணைப்பதற்காக நடத்தப்பட்ட இந்த அறுவை சிகிச்சைகள் சுமார் 5 மணி நேரம் நடந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் அறுவை சிகிச்சைக்குப் பிறகு மலாலா நலமுடன் உள்ளார் என்றும் மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் தனது மகளுடன் லண்டன் சென்று மலாலாவை மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறிய பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி, அவருக்கு மேல் சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளதால் குடும்பத்தாருடன் மலாலா லண்டனிலேயே தங்கியிருக்க ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத் தக்கது.

பின்னூட்டமொன்றை இடுக