Archive for the ‘NCHRO’ Category


அமெரிக்க சிஐஏவுக்கு அல்காய்தா பின்லேடனின் இருப்பிடத்தைக் காண்பித்துத் தந்த மருத்துவருக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் 33 வருட சிறைத் தண்டனை விதித்துள்ளதை அமெரிக்க எம்.பிக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அந்த மருத்துவர் மன்னிக்கப்பட வேண்டும் என்று கோரியுள்ளனர்.
அமெரிக்க அரசால் தேடப்பட்ட அல்காய்தா தலைவர் ஒசாமா பின் லேடனை பாகிஸ்தானின் அப்போடாபாத் நகரிலுள்ள பங்களாவில் அமெரிக்கப் படையினர் கடந்த ஆண்டு சுட்டுக்கொன்றனர். மருத்துவரான ஷகில் அஃப்ரிடி என்பவர் தான், பின்லேடன் மறைவிடம் குறித்து அமெரிக்க சிறப்புப் புலனாய்வுத் துறைக்கு தகவல் கொடுத்தது தெரிய வந்தது. இதையடுத்து, அஃப்ரிடி மீது அரசத் துரோக குற்றம் சுமத்தப்பட்டது.

பாகிஸ்தானில் டாக்டர் அஃப்ரிடி மீது தொடுக்கப்பட்ட வழக்கில் நேற்று அளிக்கப்பட்ட தீர்ப்பில், தேசத்துரோகம் புரிந்ததாக அஃப்ரிடிக்கு 33 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இந்தத் தீர்ப்பை அறிந்த அமெரிக்க எம்.பி.க்கள் ஜான் மெக்கெய்ன் மற்றும் கார்ல் லெவின் ஆகியோர் ‘ஒசாமா தேடுதல் வேட்டையில் அமெரிக்காவுக்கு உதவிய பாகிஸ்தான் டாக்டர் அஃப்ரிடிக்கு 33 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. இது இருநாட்டு உறவுக்கு குந்தகம் விளைவிக்கும். எனவே, அஃப்ரிடியை மன்னித்து பாகிஸ்தான் அரசு விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.


டெல்லி:2002-ல் குஜராத்தில் நடந்த இனக் கலவரத்தில் மோடியின் பங்கு குறித்து விசாரிக்க வேண்டும் என்று அமிக்கஸ்-க்யூரி(உச்சநீதிமன்றத்துக்கு ஆலோசனை தர நியமிக்கப்பட்டவர்) ராஜு ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

கோத்ரா இனக்கலவர வழக்குத் தொடர்பாக ஆலோசனை கூறுவதற்காக உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டவரான ராஜூ ராமச்சந்திரன் இதுகுறித்து அஹமதாபாத் கோர்ட்டில் அளித்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

2002 குஜராத் கலவரத்தில் முதல்வர் நரேந்திர மோடியின் பங்கு குறித்து விசாரிக்கப்பட வேண்டியது அவசியமாகிறது. சில போலீஸ் அதிகாரிகளும், அரசு வக்கீல்களும் சரியான முறையில் செயல்படவில்லை என்றும், கலவர வழக்குகளை அவர்கள் சரியாக கையாளவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் எரிப்புக்குப் பின்னர் அதுதொடர்பான செய்தி குஜராத் முழுவதும் பரப்பப்பட்ட விதம், அதுதொடர்பாக வெடித்த கலவரத்தைக் கட்டுப்படுத்தக் கூடாது என்று காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டதா என்பது குறித்தும் தீர விசாரிக்க வேண்டியுள்ளது.

மேலும் 2002ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி இரவு 11 மணியளவில் முதல்வர் மோடியின் இல்லத்தில், மூத்த அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்துள்ளது. இருப்பினும் அந்த ஆலோசனைக் கூட்டத்தில் தான் கலந்து கொண்டதாக அப்போது உளவுப் பிரிவு துணை ஆணையராக இருந்தவரான சஞ்சீவ் பட் கூறியதில் உண்மை இல்லை என்று உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட எஸ்ஐடியின் தலைவர் கூறியுள்ளார்.

ஆனால், அப்போது மூத்த உளவுப் பிரிவு அதிகாரியாக சஞ்சீவ் பட் இருந்தார் என்பதால், அவர் கூட்டத்தில் கலந்து கொண்டாரா என்பது குறித்து ஆராய வேண்டியது அவசியமாகிறது. அவர் கலந்து கொண்டதற்கான நேரடி ஆதாரம் பட்டிடம் இல்லாவிட்டாலும் கூட சந்தர்ப்ப சூழ்நிலை ஆதாரம் இருக்கிறதா என்து விசாரிக்கப்பட வேண்டும்.

இந்தக் கூட்டத்தில் இந்துக்கள் தங்களின் கோபத்தை வெளிப்படுத்துவதைத் தடுக்கக் கூடாது என்று முதல்வர் மோடி கூறியதாக பட் கூறியுள்ளார். இது முக்கியமானது. இதுகுறித்து விசாரிக்கப்பட வேண்டும். மோடி அப்படிக் கூறினாரா இல்லையா என்பது உறுதி செய்யப்பட வேண்டியது அவசியம். ஒரு வேளை அவர் அப்படிச் சொல்லியிருந்தால் அது சட்டப்படி குற்றமாகும். மேலும் எனது கருத்துப்படி, மோடி மீது தொடக்க நிலையிலேயே 153A (1) (a) மற்றும் (b), 153B (1) (c), 166 மற்றும் 505 (2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய முடியும். இருப்பினும் இதுகுறித்து கோர்ட்டே முடிவு செய்ய வேண்டும்.

அஹமதாபாத் நகர முன்னாள் இணை ஆணையர் எம்.கே.டாண்டன், அகமதாபாத் முன்னாள் துணை கமிஷனர் பி.பி.கோண்டியா ஆகியோர் மீது ஐபிசி 304A மற்றும் 166 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது இங்கு நினைவு கூறத்தக்கது என்று ராஜு ராமச்சந்திரனின் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.


டெல்லி:மத்திய புலனாய்வு ஏஜன்சியான சி.பி.ஐ, பாப்ரி மஸ்ஜித் இடிப்பு வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில், பாப்ரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் அத்வானியை விடுவித்ததை எதிர்ப்பது மட்டும் சி.பி.ஐயின் நோக்கமில்லை. மாறாக, அத்வானி உள்ளிட்டோர் பாப்ரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் கட்டாயம் விசாரணைச் செய்யப்பட வேண்டும் என்பதாகும் என்று கூறியுள்ளது.

1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி வரலாற்றுச் சிறப்புமிக்க முஸ்லிம்களின் வழிப்பாட்டுத் தலமான இறை இல்லம் பாப்ரி மஸ்ஜித் கரசேவகர்கள் என்ற ஹிந்துத்துவ கயவர்களால் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. இதுத்தொடர்பான வழக்கு கடந்த 19 ஆண்டுகளாக முடிவு இல்லாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.

பாபர் மஸ்ஜித் இடிப்பு தொடர்பாக 197/92 என்ற எண்ணில் ஒரு முதல் தகவல் அறிக்கையும், 198/92 என்ற எண்ணில் இன்னொரு முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டது.

முதல் தகவல் அறிக்கையில் கரசேவகர்கள் என்ற பட்டியலில் பாபர் மஸ்ஜிதை இடித்தவர்கள் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். 2வது முதல் தகவல் அறிக்கையில், கரசேவகர்களிடம் வெறியுணர்வைத் தூண்டும் வகையில் ஆவேசமாகப் பேசியது, சதித் திட்டம் தீட்டியது உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு அத்வானி, உமா பாரதி, முரளி மனோகர் ஜோஷி, வினய் கத்தியார், சாத்வி ரிதம்பரா, அசோக் சிங்கால், பால் தாக்கரே, கிரிராஜ் கிஷோர் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த வழக்கை 1992ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி முதல் சிபிஐ விசாரித்து வருகிறது. சிபிஐ சார்பில் கடந்த 1993ம் ஆண்டு அக்டோபர் 5ம் தேதி லக்னோ மாஜிஸ்திரேட் கோர்ட்டில், இரண்டு வழக்கிலும் சேர்த்து அத்வானி உள்ளிட்ட 40 பேருக்கு எதிராக குற்றபப்த்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து 1994ம் ஆண்டு ஏப்ரல் 27ம் தேதி வழக்கு செஷன்ஸ் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. 2001ம் ஆண்டு லக்னோ செஷன்ஸ் நீதிமன்றம், அத்வானி, பால் தாக்கரே, கல்யாண் சிங் உள்ளிட்ட 21 பேர் மீதான சதித் திட்டம், சதி ஆலோசனை ஆகிய வழக்கிலிருந்து விடுவித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து சிபிஐ அப்பீல் செய்தது.

அப்பீல் மனுவை விசாரித்த ரேபரேலி கோர்ட், அத்வானி உள்ளிட்ட 8 பேர் மீதான குற்றச்சாட்டுக்களில், அத்வானியை மட்டும் விடுவித்து மற்ற 7 பேர் மீது குற்றச்சாட்டுக்களைப் பதிவு செய்ய உத்தரவிட்டது. இதை எதிர்த்து லக்னோ உயர்நீதிமன்றத்தை நாடியது சிபிஐ. அதை விசாரித்த உயர்நீதிமன்றம் அத்வானி மீதும் குற்றச்சாட்டைப் பதிவு செய்ய உத்தரவிட்டது. அதன்படி குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ உச்சநீதிமன்றத்தில் ஒரு பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது. அத்வானி உள்ளிட்டோரை வழக்கிலிருந்து விடுவிக்க முடியாது. அவர்களது ஆவேசப் பேச்சினால்தான் பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட நேரிட்டது. எனவே இவர்கள் விசாரணையை சந்தித்தாக வேண்டும் என்று சிபிஐ தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பிரமாணப்பத்திரத்தில் சி.பி.ஐ கூறியிருப்பது:

முதல் தகவல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள சில குற்றவாளிகளைப் பிரித்து 2வது முதல் தகவல் அறிக்கையில் உள்ளோருடன் சேர்த்து விசாரிப்பது இயலாத காரியம். மேலும் இரண்டு முதல் தகவல் அறிக்கைகளும் வேறு வேறு வழக்குகள் என்பதும் தவறான வாதமாகும். இரு முதல் தகவல் அறிக்கைகளிலும் இடம் பெற்றுள்ளவர்களின் ஒரே நோக்கம் சர்ச்சைக்குரிய கட்டடத்தை (பாப்ரி மஸ்ஜித்) இடித்துத் தரைமட்டமாக்குவது என்பது மட்டுமே. இந்த சதித் திட்ட வேலையில் அனைவருமே இணைந்து ஒரே நோக்கத்துடன் செயல்பட்டுள்ளனர்.

சர்ச்சைக்குரிய கட்டடம்(பாப்ரி மஸ்ஜித்) இடிக்கப்படுவதற்கு முன்பு, 2வது முதல் தகவல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள 8 குற்றம் சாட்டப்பட்டோரும், தாக்குதலைத் தூண்டி விடும் வகையில் ஆவேசமாக பேசியுள்ளனர். இந்தப் பேச்சால் தூண்டப்பட்டுத்தான் முதல் தகவல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள குற்றம் சாட்டப்பட்டோர் சம்பந்தப்பட்ட கட்டடத்தை இடித்துத் தரைமட்டமாக்கினர்.

சர்ச்சைக்குரிய கட்டடம்(பாப்ரி மஸ்ஜித்) இடிக்கப்பட்டபோது 2வது முதல் தகவல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள தலைவர்கள் அதை கை தட்டியும், ஒருவரை ஒருவர் கட்டித் தழுவிக் கொண்டும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடியுள்ளனர். சர்ச்சைக்குரிய கட்டடம்(பாப்ரி மஸ்ஜித்) உள்ள இடத்திலிருந்து 175 மீட்டர் தொலைவில் உள்ள கட்டடத்தில் இருந்தபடி சர்ச்சைக்குரிய கட்டடம்(பாப்ரி மஸ்ஜித்) இடிக்கப்படுவதை இவர்கள் பார்த்து ரசித்துள்ளனர்.

ஆவேசமாக கூச்சலிடுவது, ஒரு சமூகத்தினருக்கு எதிராக இன்னொரு சமூகத்தினரை தூண்டி விடுவது என்பது தேசிய ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் செயலாகும். எனவே இவர்களைத் தனித்துப் பார்ப்பது என்பது இயலாத காரியம். எனவே குற்றப்பத்திரிக்கையில் இடம் பெற்றுள்ள அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் நிச்சயம் விசாரணையை சந்தித்தாக வேண்டும் என்று சிபிஐ கூறியுள்ளது.


Saeed helping only to de-radicalize the militants : Pakistan

அமெரிக்க அரசால் 10 மில்லியன் டாலர் (சுமார் 50 கோடி ரூபாய்கள்) தலைக்கு விலை வைக்கப்பட்டுள்ள லஷ்கர் இ தய்பா மற்றும் ஜமாஅத்துத் தாவா தலைவர் ஹஃபீஸ் சயீத் உண்மையில் தீவிரவாதிகளைத் திருத்தி நல்வழிப்படுத்தவே உதவினார் என்று பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
ஆறு அமெரிக்கர்கள் உட்பட 166 பேர் கொல்லப்பட்ட மும்பை 26/11 சம்பவத்தின் சூத்திரதாரி என்று இந்தியா ஹஃபீஸ் சயீதை குறிப்பிட்டிருக்கையில், அதை ஏற்று, அமெரிக்காவும் அவர் தலைக்கு சுமார் 50 கோடி ரூபாய்கள் விலை வைத்திருக்கும் நிலையில், தீவிரவாத எதிர்ப்பு பாகிஸ்தான் அதிகாரி ஒருவர் உண்மையில் சயீத் அச்சமயம் பஞ்சாப் மாநில அரசு அதிகாரிகளைச் சந்தித்து தீவிரவாதிகளைத் திருத்துவதற்கே ஒத்துழைப்பு நல்கினார் என்று கூறியுள்ளார். தீவிரவாதிகளை நல்வழிப்படுத்தும் அந்தச் சேவைக்கு சயீத் எந்தப் பிரதிபலனையும் எதிர்பார்க்கவில்லை என்றும் அந்த அதிகாரி கூறினார்.

பஞ்சாப் மாநிலத்தின் தீவிரவாத எதிர்ப்புப் பிரிவு துப்பறியும் காவல் அதிகாரி ஒருவரும் மேற்கண்ட மைய அரசு அதிகாரியின் கூற்றை உறுதிபடுத்தியுள்ளார். தங்களுடைய அறிவார்ந்த அணுகுமுறையாலும் நடவடிக்கைகளாலும் தீவிரவாதிகள் பலரையும் திருத்தி சட்டத்துக்குட்பட்ட குடிமகன்களாக ஜமாஅத்துத் தாவா மாற்றியது என்றார் அந்த காவல் அதிகாரி.

இதற்கிடையில் “நீதிக்கான வெகுமதி” என்னும் திட்டத்தின் கீழ் அமெரிக்க அரசு அறிவித்துள்ள சயீத் தலைக்கான வெகுமதி பல மாத ஆய்வுக்குப் பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது என்று அமெரிக்க அரசு அதிகாரி ஒருவர் வாஷிங்டனில் தெரிவித்துள்ளார்.

தாம் இந்தியாவுடன் நெருக்கமாகப் போகிறோம் என்பதை பாகிஸ்தானுக்கு அறிவிக்கும் அமெரிக்க யுக்தியே இந்த அறிவிப்பு என்று உலக அரசியல் நோக்கர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

 


நப்லஸ்: கடந்த மார்ச் மாதத்தில் நப்லஸ் பிராந்தியத்தில் மட்டும் 11 குழந்தைகள் உட்பட 38 பலஸ்தீனர்கள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர் என மனித உரிமைகளுக்கான தாடமன் அமைப்பு வியாழக்கிழமை (05.04.2012) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்படி பிராந்தியத்தினுள் அடிக்கடி அத்துமீறி நுழையும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை, பெண்கள், சிறுவர், வயோதிபர் என்ற வேறுபாடின்றி, பலஸ்தீன் பொதுமக்களைக் கடத்திச் சென்று வதைமுகாம்களில் தடுத்துவைப்பதை வழமையாகக் கொண்டுள்ளது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்கிரமிப்பு இராணுவத்தினால் கடத்திச் செல்லப்பட்டவர்களுள் பக்கவாத நோயாளி ஒருவரும் அடங்குவார். உத்மான் கலீலி எனப்படும் அந்தப் பலஸ்தீனர், ஆறு வருடங்களுக்கு முன் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைச் சிப்பாயினால் முதுகு முள்ளந்தண்டைக் குறிவைத்துச் சுடப்பட்டதில் பக்கவாத நோயாளியானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மார்ச் மாதம் மேற்குக்கரைப் பிராந்தியத்தில் மட்டும் வயது வேறுபாடுகளுக்கு அப்பால் 7 பெண்கள், 56 சிறுவர்கள் உள்ளிட்டு 300க்கும் அதிகமான பலஸ்தீன் பொதுமக்கள் ஆக்கிரமிப்புப் படையினரால் பலவந்தமாகக் கடத்திச் செல்லப்பட்டு தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என உள்ளூர் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.


அஹ்மதாபாத்:குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக மோடியால் முன்னின்று நடத்தப்பட்ட இனக்கலவரம் நடந்து 10 ஆண்டுகள் முடிவுற்ற நிலையில் அதனை நினைவு கூறும் விதமாகவும் அதற்கு நீதிகேட்கும் விதமாகவும் பேரணிகள் நடத்த குஜராத் காவல்துறை அனுமதி மறுத்து வருகிறது.

கடந்த பிப்ரவரி 26_ஆம் தேதியும் மற்றும் மார்ச் 10-ம் தேதி சமூக அமைப்புகள் போராட்டங்களை நடத்த குஜராத் காவல்துறை அனுமதி மறுத்தது.

அஹமதாபாதில் 11  நாட்கள் நடைபெற்ற குஜராத் இனக்கலவர எதிர்ப்பு நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக கடந்த பிப்ரவரி 26-ம் தேதி மெஹ்தி நவாப் ஜங் அரங்கில் அமைதி, நீதி மற்றும் மத நல்லிணக்கத்திற்காக சமூக ஆர்வலர்களின் கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பேரணி செல்ல சமூக ஆர்வலர்கள் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் இறுதி நிமிடத்தில் குஜராத் காவல்துறை இந்த பேரணிக்கு அனுமதியை ரத்து செய்தது. மேலும் மெஹ்தி நவாப் ஜங் அரங்கையும் சுற்றி வளைத்து முற்றுகையிட்டது.

மேலும் மதசார்பற்ற ஜனநாயக அமைப்பு மற்றும் குடிமையியல் உரிமைகள் அமைப்பும் மற்ற சமூக அமைப்புகளுடன் சேர்ந்து அதே இடத்தில் மீண்டும் கடந்த மார்ச் 10-ம் தேதி பேரணி நடத்த முயன்றனர். ஆனால் குஜராத் காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது. இதனைத் தொடர்ந்து அவர்கள் தடையை மீறி ஊர்வலம் செல்ல முயன்றனர். அவர்களை காவல்துறை கைது செய்து பிறகு விடுவித்தது. இந்த போராட்டத்தில் பங்கு பெற்றவர்கள் அனைவரும் பிரபல சமூக ஆர்வலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

காவல்துறையின் இந்த நவடிக்கை குறித்து சமூக ஆர்வலர்கள், குஜராத் அரசு அமைதியான முறையில் நடத்தப்படும் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கும் அனுமதி தர மறுப்பதாகவும் இதன் மூலம் அரசு தனக்கு எதிராக யார் பேச நினைத்தாலும் அவர்களை அடக்க நினைப்பது தெளிவாகிறது என்றும் தெரிவித்துள்ளனர்.


டெல் அவிவ்: தென் இஸ்ரேலில் உலகிலேயே மிகப் பிரமாண்டமான சிறைச்சாலையொன்றைக் கட்டும் பணி வெகு விரைவில் தொடங்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சனிக்கிழமை (10.03.2012) வெளியான பத்திரிகைச் செய்தியில், இச்சிறைச்சாலை 8000 கைதிகளை அடைத்துவைக்கக்கூடிய வசதியைக் கொண்டிருக்கும் என்றும், சுமார் 18 மாதங்களுக்கு முன்பே இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசாங்கம் சிறைச்சாலைக் கட்டுமானப் பணிகளுக்கான அனுமதியை வழங்கிவிட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, “ஆக்கிரமிக்கபட்ட இஸ்ரேலியப் பிரதேசத்தினுள் பிரவேசிக்கும் பலஸ்தீனர்கள் மூன்று வருடகாலம் எந்தவித விசாரணையும் இன்றித் தடுத்துவைக்கப்படுவார்கள்” என கடந்த ஜனவரி மாதம் 10 ஆம் திகதி இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரசபை புதிய சட்டமொன்று பிறப்பித்துள்ளது.

மேலும், “ஆக்கிரமிக்கப்பட்ட இஸ்ரேலியப் பிராந்தியங்களுக்குள் பலஸ்தீனர்கள் வந்து தொழில் செய்வதானது, இஸ்ரேலியர்களுக்கான தொழில்வாய்ப்புகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக அமையும்” என அண்மையில் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.